31.01.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 4 | Rev. Solomon

சுகம் ஒரு சுதந்தரம் – 4

 

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2). 

 

தாவீது, “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்கீதம் 16:11) என்று சொல்லுகிறார். தேவனுடைய மார்க்கத்தை ‘ஜீவமார்க்கம்’ அல்லது ‘ஜீவ வழி’ என்று சொல்லுகிறார். இன்றைக்கு அநேக மக்கள் பாவத்தின்நிமித்தமாக மரண வழியிலே நடந்து கொண்டிருக்கிறார்கள். நீதிமொழிகள் 14:12-இல், “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் மத்தியிலே தேவன் ஜீவ வழியை வைத்திருக்கிறார். ஜீவ வழியைக் கண்டுபிடித்து அதில் நடக்கிறவர்கள் தேவனையே கண்டடைகிறார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இது மிகப்பெரிய ஒரு சிலாக்கியம். இன்றைக்கு உலகத்தில் அரிய, பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், டி.வி, விமானம் இவையெல்லாமே மனிதனின் கண்டுபிடிப்புகள். இவை மனிதனின் வாழ்க்கையை வளமாக்கி இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் கண்டுபிடித்தாலும் மனிதன் தன்னை உண்டாக்கின தேவனை மறந்தானேயாகில் அதைப்போல நஷ்டம் எதுவும் கிடையாது. உலகத்திலேயே மனிதன் கண்டுபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், தன்னை உண்டாக்கிய தேவன் யார் என்று கண்டுபிடிப்பதுதான். அவரை கண்டுபிடிக்கும்போது மனிதன் பரிபூரண ஆனந்தத்தையும், நித்திய பேரின்பத்தையும் அனுபவிக்கிறான். உலகத்திலும் ஒரு சில ஆனந்தம் இருக்கிறது. சிலர் நன்றாக படித்து வெற்றி பெறுகிறார்கள், சிலருக்கு நல்ல வேலை கிடைக்கிறது, சிலருக்கு திருமணம் நடக்கிறது, குழந்தைகள் பிறக்கிறது. சிலர் புது வீடு, கார் வாங்குகிறார்கள். இவையெல்லாம் நடக்கும்போது சந்தோஷம் கிடைக்கிறது. ஆனால் அது என்றுமே நிலைத்திருப்பதில்லை. அந்த சந்தோஷம் கொஞ்சங்காலம்தான், பின்னர் அது மாறிவிடுகிறது. இந்த உலகப்பிரகாரமான வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால் மெய்யான சந்தோஷம், நிரந்தரமான சந்தோஷம் ஆண்டவரிடம் மட்டுமே இருக்கிறது. ஆகவே இந்த பரிபூரண ஆனந்தத்தை அனுபவிக்க ஒரே ஒரு ஜீவ வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டும் தான். அதற்காகத்தான் அவர் கல்வாரி சிலுவையில் தொங்கி இரத்தஞ்சிந்தி நரகத்திற்குச் சென்று பாடுகளையும், வேதனைகளையும் அனுபவித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து மனிதனுக்காக ஜீவ வழியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இயேசுவே வழி. அவரை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு சுக வாழ்வை ஒரு சுதந்தரமாக வைத்திருக்கிறார். சிலர் தங்களுடைய ஆஸ்தி, சொத்து இவற்றின் மேல் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். வேறு யாரேனும் அதற்கு உரிமை பாராட்டினால் அவ்வளவுதான், தொலைத்துவிடுவார்கள். உலகப்பிரகாரமான சொத்திற்கே மக்கள் இவ்வளவு வைராக்கியம் பாராட்டுகிறார்கள்! ஆவிக்குரிய ரீதியிலே நம்முடைய அப்பா இயேசு சிலுவையிலே பாடுபட்டு, பல நன்மையான காரியங்களை நமக்காக சம்பாதித்து கொடுத்திருக்கிறார். அந்த சொத்துக்களில் முக்கியமான ஒன்று சரீர சுகம். இதை அபகரிக்கவே பிசாசு இருக்கிறான். ஆனால் நாம் பிசாசுக்கு எதிர்த்து நின்று சுகத்தை நம்முடையதாக்கி பற்றிக்கொள்வோமேயானால் மாத்திரமே சுகம் நம்முடையதாய் மாறும். கர்த்தர் சிலுவையில் சம்பாதித்ததினால் தானாகவே சுகம் நம்முடையதாகி விடாது. நாம் அதைப் புரிந்துகொண்டு சுகம் என்னுடையது என்று சொந்தம்பாராட்டி அதை எடுத்துக்கொள்ள வேண்டும். வேதப்புத்தகம் ஒரு சொத்துப் பத்திரம், அது ஒரு ஜீவ புத்தகம், நமக்கு வாழ்வு கொடுக்கிற ஒரு புத்தகம். தேவன் நமக்கு கொடுத்திருக்கிற எல்லா நன்மைகள், சுதந்தரம், சொத்துகள் இவற்றைப் பற்றியெல்லாம் அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதை நன்றாக வாசித்து, புரிந்துக்கொண்டு, கவனித்து சொந்தமாக்க வேண்டிய பொறுப்பு விசுவாசிகளுக்கு இருக்கிறது. இதை விசுவாசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவையெல்லாம் நமக்கு சொந்தமாக மாறும்.

 

டெரிக் பிரின்ஸ் என்ற ஒரு பிரசங்கியார் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் நிறைய தத்துவ புத்தகங்களை படித்திருக்கிறார். ஒருநாள் அவர் வேதப்புத்தகத்தையும் தத்துவ புத்தகம் என நினைத்து ஆதியாகமம் முதல் படித்துக்கொண்டே வந்தார். அப்போது ஒருநாள் வேதப்புத்தகத்தை எழுதின இயேசுவே என்னை சந்தித்து விட்டார் என்று அவர் சொன்னார். அன்றே அவர் இயேசுவை தன்னுடைய ஆண்டவராக ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் இவ்வாறு சொன்னார்: பொதுவாக என்னைப் போன்றவர்கள் இரட்சிக்கப்படுவது மிகவும் கடினம். ஏனெனில் நான் மூளையறிவை சார்ந்து வாழ்பவன். கர்த்தரே என்னை இரட்சித்ததினால் மாத்திரமே நான் இரட்சிக்கப்பட்டேன் என்று ஆச்சரியப்பட்டார். ஒருநாள் ஆண்டவரே தன்னிடம் பேசியதாக அவர் கூறினார். அதாவது இந்த வேதத்தில் ஏராளமான நன்மைகள், சுதந்தரம், சொத்துகள் எல்லாவற்றையும் இலவச ஈவாக எழுதி வைத்திருக்கிறேன். நீ அதை வாசித்து, சொந்தம்பாராட்டி எடுத்துக்கொள் என்று சொன்னாராம். அன்றிலிருந்து அவர் வேதம் வாசிக்கும்போது தனக்கு உணர்த்தப்படும் வசனத்தை பேனாவால் குறித்து வைத்துக்கொண்டே வந்தார். அப்படியே முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்துவிட்டார். அவருடைய வேதாகமம் வெள்ளை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறியிருந்தது. ஏனெனில் அவ்வளவு நன்மையான சுதந்தரத்தை தேவன் நமக்காக கொடுத்திருக்கிறர். அந்த பிரசங்கியார் அவற்றை சொந்தம்பாராட்டி எடுத்துக்கொண்டதால் அவருடைய ஊழியம் சர்வதேச அளவில் மிகப்பெரிதாக வளர்ந்தது. அவர் வேதத்தை வாசிக்காமல் போயிருந்தால் இவ்வளவு நன்மைகளை அனுபவித்திருக்க முடியாது. இன்றைக்கு அவர் உலக அளவில் ஊழியம் செய்கிறார். அவர் நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

ஆகவே வேதப்புத்தகம் என்பது தேவனுடைய ஆசீர்வாதங்கள் அடங்கிய ஜீவ புத்தகம். அதை நேசித்து இரவும் பகலும் தியானமாயிருந்து அதில் எழுதப்பட்டுள்ள வசனங்களைப் புரிந்துகொண்டு, சொந்தம்பாராட்டி விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய வாழ்க்கை கற்பனைக்கும் எட்டாத விதத்தில் உயருவதை காண்போம். தேவன் எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி ராஜாக்களோடு உட்கார வைக்கிறார். அவர் சத்தியத்தின் மூலமாகத்தான் நம்மை உயர்த்துகிறார். ஆகவே வேதப்புத்தகத்தில் தேவன் எண்ணற்ற ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். அதைப் பற்றிக்கொண்டு எடுத்துக்கொள்வோமானால் அது நம்முடையதாக மாறும், இல்லையென்றால் அது நம்முடையதாக மாறாது. “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசியர் 1:3) என்று வேதம் சொல்லுகிறது. நமக்கு ஆசீர்வாதங்கள் ஏற்கனவே அருளப்பட்டிருக்கிறது. “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளியிருக்கிறது” (2 பேதுரு 1:3) என்றும் வேதம் சொல்லுகிறது. தேவன் நம்முடைய உபவாசத்தையோ அல்லது கண்ணீரையோ பார்த்து நன்மைகளை தருவதில்லை. நாம் கண்ணீர்விட்டு உபவாசிப்பதற்கு முன்னதாகவே அவருடைய திவ்விய வல்லமை எல்லா நன்மைகளையும் நமக்கு தந்தருளியிருக்கிறது. கர்த்தராலே நாம் ஏற்கனவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஒருவேளை சிலருக்கு சொந்தமாக வீடு அல்லது வண்டி அல்லது திருமண வாழ்க்கை இவையெல்லாம் தேவையாக இருக்கலாம். இவற்றையெல்லாம் கொடுக்கப்போவதற்காக நாம் தேவனை விசுவாசித்து நன்றி செலுத்த வேண்டும். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர். ஆதியிலே பூமி ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தில் இருள் இருந்தது. தேவன் இருக்கிற இருளைப் பற்றி பேசாமல் இல்லாத வெளிச்சத்தை அழைத்தார், வெளிச்சம் உண்டாயிற்று. அதுதான் விசுவாசம். நம்முடைய ஆவி மண்டலத்தில் ஏற்கனவே எல்லா ஆசீர்வாதங்களும் இருக்கிறது. இப்போது நாம் விசுவாசமாக எல்லாவற்றையும் அழைக்க வேண்டும். அப்போது சொந்த வீடு, கார், திருமண வரன் என எல்லாவித நன்மைகளாலும் உங்கள் வாழ்க்கை நிரம்புவதைக் காண்பீர்கள். இயேசுவின் நாமத்தினாலே நமக்கு எல்லாமே ஆம் என்றும், ஆமென் என்றும் உள்ளது. “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்று வேதம் சொல்லுகிறது. நாம் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை குழந்தை இல்லாவிடில், “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங்கீதம் 127:4) என்பதை அறிக்கை செய்து விசுவாசிக்க வேண்டும். இப்படி விசுவாசித்து அறிக்கை செய்யும்போது பிள்ளைகள் உண்டாவதைக் காண்பீர்கள். கர்த்தர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர். அவருக்கும் வெறுமைக்கும் சம்மந்தமே கிடையாது. தேவன் விசுவாசத்தை கனம்பண்ணுகிறார். அவரை விசுவாசிக்கும்போது அவர் அருளின ஆசீர்வாதங்களை வெளிப்படச் செய்கிறார். தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளியிருக்கிறது. ஆகவே நாம் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

 

இன்றைக்கு சாட்டிலைட் மூலம் டி.வி சேனல்கள் எல்லாம் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதற்காக அவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து நவீன உபகரணங்களை எல்லாம் வாங்கி எந்த தடையும் இல்லாமல் எல்லாருக்கும் கிடைப்பதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது நம் வீட்டில் டி.வியில் படம் சரியாக தெரியாமல் கோளாறு ஏற்பட்டால் பிரச்சனை ஒளிபரப்பக்கூடிய சாட்டிலைட்டில் கிடையாது, நம்முடைய டி.வியில் தான்.  நாம் தான் டி.வியை சரி செய்து, பழுது பார்த்து நல்ல நிலையில் வைக்க வேண்டும். அப்போது படம் நன்றாக தெரியும். அதேபோல் தான் கர்த்தருடைய நன்மைகள் நம்முடைய வாழ்க்கையில் வர வேண்டுமென்றால் நம் எண்ணங்களைத்தான் சரிசெய்ய வேண்டும். நாம் விசுவாசத்தின்படி யோசித்து பேசுகிறவர்களாக, செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது கர்த்தருடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வது எளிதாகிவிடும். நாம் கர்த்தரை அறிகிற அறிவினால் தான் மாற முடியும். தேவ ஆவியானவர் சத்தியத்தைக் குறித்த அறிவை நமக்கு உண்டாக்கித் தருகிறார். இது மூளையறிவைக் காட்டிலும் உயர்ந்தது. அதுதான் விசுவாசம். அந்த ஞான அறிவு உள்ளே வரும்போது கர்த்தருடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது எளிதாகி விடுகிறது. இந்த ஞான அறிவு இல்லையென்றால் பிசாசு நம்முடைய ஆசீர்வாதங்களை பறித்து விடுகிறான், நாம் அவற்றை இழந்துவிடுகிறோம். “என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள்” என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே வேதத்தை திரும்ப திரும்ப வாசித்து, கர்த்தரைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். இந்த அறிவு பெருகும்போது கர்த்தர் நமக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது எளிதாகி விடுகிறது.

 

ஒருமுறை ஒரு வாலிபனின் பெற்றோர் அவனது வேலைக்காக கஷ்டப்பட்டு கப்பல் டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்கள். அவன் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து அனுப்பட்டும் என்று டிக்கெட் பணத்தை மட்டும் மிகவும் பாடுபட்டு கட்டினார்கள். அவனது பிரயாணத்தின்போது சாப்பாட்டுக்கு தனியாக பணம் இல்லை. அதனால் கட்டுச்சோறு, முறுக்கு, சீடை என எல்லாவற்றையும் கொடுத்து இதை வைத்து சமாளித்துக்கொள் என்று வழியனுப்பி விட்டனர். அவனும் கப்பல் பிரயாணத்தின்போது அதை சாப்பிட்டுக் கொண்டே வந்தான். மற்றவர்கள் கப்பல் கேண்டீனில் 3 வேளையும் வயிறு நிறைய சுவையாக சாப்பிட்டார்கள். இவனிடம் பணம் இல்லாததால் அந்தப் பக்கமே போகவில்லை. நாட்கள் செல்ல செல்ல அவனிடமிருந்த எல்லா சாப்பாடும் தீர்ந்து அரைவயிறு, குறைவயிறு என்று சாப்பிட்டு, பின்னர் முழு பட்டினியாகவே இருந்தான். அப்போது ஒருவர் அவனிடம், “நீ ஏன் கேண்டீனில் சென்று சாப்பிடவில்லை? ஏன் இப்படி பட்டினியாக கிடக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “என்னிடம் உணவுக்கென்று தனியாக எந்த பணமும் இல்லை” என்றான். உடனே அவர், “நீ எடுத்த கப்பல் டிக்கெட்டிலேயே பிரயாண நாட்களுக்கான உணவின் எல்லா பணமும் இருக்கிறது. அதற்கும் சேர்த்து தான் நீ டிக்கெட் எடுத்திருக்கிறாய்” என்றார். உடனே அவன் அதிர்ந்து, தன் தலையில் அடித்துக்கொண்டு, இவ்வளவு நாள் இது தெரியாமல் பட்டினியாக கிடந்தேனே என்று அழுதான். இதேபோல் தான் இன்றைக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தேவன் ஏற்படுத்தி வைத்த ஆசீர்வாதமான பூலோக வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல் வேண்டாம் என்று சொல்லி, பின்னர் பரலோகத்திற்குச் சென்ற பிறகு, “ஐயோ, இத்தனை ஆசீர்வாதங்களையும் அனுபவிக்காமல் இழந்துவிட்டேனே” என்று புலம்புவார்கள். ஆகவே ஞான அறிவு நமக்கு இருக்க வேண்டும். அது பெருகும்போது ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது எளிதாகி விடுகிறது. “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (ஏசாயா 33:6). கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நாணலைப்போல ஆடுவது கிடையாது. துன்மார்க்கர் காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல இருக்கிறார்கள். ஆனால் தேவனுடைய மக்கள் உறுதியான, அசைக்க முடியாத, ஜெயிக்கிற வாழ்க்கை வாழுகிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி வாழும்போதுதான் பாவத்தில் வாழுகிற மக்கள் நம்மைப் பார்த்து கர்த்தரிடம் வருவதற்கு அது ஏதுவாக இருக்கும். நம்முடைய வாழ்க்கையே நாணலைப்போல ஆடிக் கொண்டிருந்தால் அது மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்காது. இயேசு முதன் முதலில் பேதுருவைப் பார்க்கும்போது, “யோனாவின் குமாரனாகிய சீமோனே” என்று அழைக்கிறார். ‘சீமோன்’ என்றால் ‘நாணல்’ என்று அர்த்தம். இந்த நாணலானது கிழக்கிலிருந்து காற்றடித்தால் மேற்கே சாய்ந்துவிடும்; மேற்கிலிருந்து காற்றடித்தால் கிழக்கே சாய்ந்துவிடும். ஆரம்பத்தில் பேதுருவின் வாழ்க்கை ஒரு நாணலைப்போல் தான் ஆடிக்கொண்டிருந்தது. ஆனால் இயேசு அவனைப் பார்த்து, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ கேபா எனப்படுவாய்” என்று சொன்னார். ‘கேபா’ என்றால் ‘கற்பாறை’ என்று அர்த்தம். பேதுரு முதலில் ஒரு உறுதியான வாழ்க்கை வாழ வேண்டும். அதைப் பார்த்து மற்றவர்கள் ஆண்டவரிடம் வர வேண்டும். இதுதான் பேதுருவைக் குறித்து ஆண்டவரின் திட்டமாய் இருந்தது. அதுமட்டுமல்ல நம்மைக் குறித்தும் தேவனுடைய திட்டம் இதுதான். அந்த உறுதியான வாழ்க்கைக்கு வழி இரட்சிப்பு மட்டுமல்ல, பூரண இரட்சிப்பும், ஞானமும், அறிவும் உன் வாழ்க்கையில் உறுதியாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த ஞான அறிவு வரும்போதுதான் ஒரு மனிதன் கலங்கரை விளக்கம் போல மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவனாக மாறுகிறான்.

 

“வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்” (நீதிமொழிகள் 24:3,4).

 

இங்கே வீடு என்று சொல்லப்பட்டிருப்பது செங்கல் மற்றும்  சிமெண்ட்டால் கட்டப்பட்ட வீட்டைக் குறிக்கவில்லை. அது குடும்பத்தைக் குறிக்கிறது. குடும்பம் ஞானத்தினாலே கட்டப்பட்டு விவேகத்தினாலே நிலைநிறுத்தப்பட வேண்டும். அதாவது அசைக்க முடியாத ஆசீர்வாதங்களினால் நிரப்பப்பட்டு உறுதியாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். பிறகு “அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்” என்று சொல்லுகிறார். அருமையும் இனிமையுமான பொருட்கள் என்றால் டி.வி., பிரிட்ஜ், சோஃபா, மிக்ஸி, கிரைண்டர் முதலானவை என்று நாம் எண்ணுகிறோம். இவையெல்லாம் உலகப்பிரகாரமான நன்மைகள். ஆனால் அதைக் காட்டிலும் விசேஷித்த நன்மைகள் குடும்பத்திற்கு வேண்டியதாயிருக்கிறது. அவை அன்பு, சந்தோஷம், சமாதானம், ஒருமனம், ஐக்கியம், ஒற்றுமை போன்றவை ஆகும். இவையெல்லாம் உலகப்பொருட்களைக் காட்டிலும் விலையேறப்பெற்றவை. ஆகவே அறிவினால் தான் அன்பு, சந்தோஷம், சமாதானம் இவையெல்லாம் வர முடியும். எனவே நாம் ஞான அறிவை விரும்பி கர்த்தரிடம் கேட்க வேண்டும். வேதப்புத்தகத்தை நேசித்து வாசிக்க வேண்டும். அதனால் தான் சங்கீதம் 1:2,3 இவ்வாறு சொல்லுகிறது: “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”. கர்த்தருடைய வேதத்தை நேசிக்கும்போது நாம் செய்வதெல்லாம் வாய்க்கும். லூக்கா 19:41-43இல் இப்படியாக வாசிக்கிறோம்: “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்குவார்கள்”. இங்கே கர்த்தர், “நீ அறிந்திருந்தால் நலமாயிருக்கும், அறியாததினால் சத்துருக்கள் உன்னை சூழ நெருக்குவார்கள்” என்று சொல்லுகிறார். ஆகவே அறிவு தான் பெரிய விடுதலையைக் கொண்டுவருகிறது. யூதர்கள் தேவன், தேவன் என்று மிகவும் வைராக்கியமாய் இருந்தவர்கள். ஆனால் அதே தேவன் இயேசு என்ற பெயரில் அவர்கள் முன் வந்து நிற்கும்போது, “இவரை சிலுவையில் அறையும்” என்று கூச்சல்போட்டார்கள். அவர்கள் இயேசுவை அறியவில்லை. ஆகவே கர்த்தர் நமக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறார் என்பதை அறிந்து, விசுவாசித்து அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆவிக்குரிய மக்கள் மத்தியிலே பிசாசு ஒரு பொய்யை விதைத்து வைத்திருக்கிறான். அதாவது, இந்த பூலோக வாழ்க்கை மிகவும் முக்கியம் கிடையாது, ஆகவே அதை சுந்தரிப்பதில் எந்த பயனும் இல்லை, பரலோகம் தான் முக்கியம், வேறு எதுவும் தேவையில்லை என்ற பொய்யை விதைத்திருக்கிறான். இந்த பொய்யை நம்பி அநேக ஆவிக்குரிய மக்கள் தங்கள் பூலோக வாழ்க்கையை இழந்துபோனார்கள். பரலோகம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல நம்முடைய பூலோக வாழ்க்கையும் மிகவும் முக்கியம். ஆகவேதான் வேதத்தின் முதல் வசனம் மிகவும் முக்கியமான வசனம். “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதியாகமம் 1:1). ஆங்கிலத்தில் heaven, earth என்ற பதம் வருகிறது. அவர் ஆதியிலே பரலோகத்தையும், பூலோகத்தையும் சிருஷ்டித்தார். எந்த தேவன் பரலோகத்தை சிருஷ்டித்தாரோ, அதே தேவன் தான் பூலோகத்தையும் சிருஷ்டித்தார் என்று இந்த வசனம் சொல்லுகிறது. பூலோகத்தை சிருஷ்டித்தது மட்டுமல்லாமல் அதை நன்றாக சீரமைக்கவும் செய்கிறார். வெளிச்சம், ஆகாயவிரிவு, சுடர்கள், மச்சங்கள், பறவைகள், மிருகங்கள் என அனைத்தையும் உண்டாக்கி, பூமியை அழகான இடமாக மாற்றினார். இவ்வாறு தேவன் ஆறு நாட்கள் வேலை செய்தார். ஏனென்றால் மனிதன் இந்த பூமிக்கு வரப்போகிறான். மனிதனுடைய கையிலே இந்த பூமியைக் கொடுக்க வேண்டும். பூமி மனிதனுக்காக படைக்கப்பட்டது. மனிதன் பூமியிலே வாழும்படி உண்டாக்கப்பட்டிருக்கிறான். கடைசியாக ஆதாமைப் படைத்து அவன் கையிலே பூமியை ஒப்படைக்கிறார். மனிதன் தேவசாயலில், தேவனுடைய பிள்ளையாக உண்டாக்கப்பட்டிருக்கிறான்.

 

“பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” (ஆதியாகமம் 1:28). 

 

இங்கு தேவன் “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்” என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார். பூமியை தேவஜனங்களால் நிரப்பினோம் என்றால் பரலோகம் தானாகவே தேவஜனங்களால் நிரம்பும். முதலாவது தேவனுடைய திட்டம் பூமி. இரண்டாவது தான் பரலோகம். பூலோகம் முக்கியமில்லை என்று நாம் சொல்லுவோமானால் நாம் பிசாசுக்கு இடங்கொடுத்து விடுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் இந்த பூமியிலே வாழ்ந்திருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர் எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் நமக்கு வைத்திருக்கிறார். இந்த பூலோகத்தில் நம்முடைய வாழ்க்கையைக் குறித்து தேவனுக்கு உயர்ந்த திட்டங்கள் இருக்கிறது. பூமிக்கு வானம் எவ்வளவாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களைக் குறித்து என் நினைவுகள் உயர்வாய் இருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே நாம் பூமியில் இருக்கும்போதே அநேகருக்கு ஆண்டவரைக் குறித்துச் சொல்ல வேண்டும். பரலோகத்திற்குச் சென்ற பிறகு யாருக்குமே சுவிசேஷம் சொல்ல முடியாது. இந்த பூமி தேவனுடைய துதியால் நிறைந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதைப் போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய துதியினாலே பூமி நிரம்ப வேண்டும். இப்படிப்பட்ட உயர்ந்த திட்டத்தைத்தான் தேவன் பூமியைக் குறித்து வைத்திருக்கிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவன் நம்மைத்தான் பயன்படுத்த விரும்புகிறார். ஆகவே தேவன் இந்த பூமியிலே வைத்திருக்கிற நல்ல சுதந்தரங்களை நாம் சுதந்தரித்து, வெற்றிகரமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். விசேஷமாக சுகத்தை நாம் சுதந்தரிக்க வேண்டும். சுகமில்லாமல் பூமியில் வெற்றிகரமாக வாழ முடியாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நாம் சுகமாயிருக்கும்படி தேவன் சுகத்தை கல்வாரி சிலுவையில் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். இந்த சுகத்தைப் பற்றிக்கொள்வது நம்முடைய கடமை. நாம் பிசாசினுடைய பொய்யை நம்புவோமானால், அவன் சுகத்தை பறித்துக்கொண்டு போய்விடுவான். தேவன் சிலுவையில் தன்னையே பலியாகக் கொடுத்து சம்பாதித்த சுகத்தை நாம் வைராக்கியமாய் பற்றிக்கொள்ள வேண்டும். சிலர் ஆண்டவர் சிலநேரம் சுகமாக்குவார், சிலநேரம் வியாதியில் விட்டுவிடுவார் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் வியாதியை கர்த்தர் தான் அனுமதிக்கிறார் என்று நம்புகிறார்கள். ஆனால் கர்த்தர் 100% வியாதியைக் கொடுப்பவர் அல்ல. அவர் கல்வாரி சிலுவையில் நமக்காக பாடுபட்டதே நம்முடைய வியாதி நீங்கி சுகமாக வாழ்வதற்குத்தான். ஆகவே வியாதி ஒருபோதும் தேவனுடைய சித்தம் அல்ல. நாம் ஆரோக்கியத்தையும், சுகத்தையும் விசுவாசித்து இந்த உலகத்தில் சாட்சியாக வாழ வேண்டும். அப்போது அதைப் பார்த்து மற்ற ஜனங்கள் ஆண்டவரிடம் வருவார்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படும். “உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்” என்று வெளிப்படுத்தல் 2:25-இல் வாசிக்கிறோம். இங்கே தேவன் நமக்குள்ளதை பற்றிக்கொள்ளச் சொல்லுகிறார். ஏனெனில் பறித்துக் கொள்வதற்காகவே பிசாசு ஆயத்தமாய் இருக்கிறான். எனவே தேவனுடைய மக்கள் வியாதி வந்தால் அதை எதிர்க்க வேண்டும். சிறிதாக ஒரு தலைவலி வந்தால் கூட அதை அனுமதிக்கக்கூடாது. இயேசுவின் நாமத்தினாலே அதை விரட்டியடிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறது. இவ்வாறு எந்த வலி, வேதனைகளையும் நம்முடைய சரீரத்தில் அனுமதிக்காமல் இயேசுவின் நாமத்தினாலே அவற்றை விரட்டியடித்து சுகத்தை பற்றிக்கொள்ள வேண்டும்.

 

“பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான். அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். உடனே அவன் தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்” (மாற்கு 10:46-52).

 

இஸ்ரவேல் ஜனங்களில் நிறைய குருடர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இவன் விசேஷமானவன். ஏனெனில் இவன் இயேசுவை விசுவாசித்தான், அவரைக் கூப்பிட்டான். மற்றவர்கள் அவன் சத்தத்தைக் கேட்டு அவனை அதட்டினார்கள். ஆனால் இவன் இவர்களுக்கெல்லாம் பயப்படவில்லை. தைரியமாய் இன்னும் அதிகமாய் கூப்பிட்டான். இயேசு நின்று அவனை அழைக்கிறார். இப்போது அவனை மிரட்டியவர்களே அவனிடம் சென்று, “பயப்படாதே, திடன்கொள், இயேசு உன்னை அழைக்கிறார்” என்று சொல்லுகிறார்கள். நாமும் ஆண்டவரை உறுதியாக பிடித்துக்கொள்வோமானால், நம்மை மிரட்டுகிறவர்களை நம் காலடியில் விழச்செய்வார், உதவியும் செய்ய வைப்பார். ஆனால் நாம் விசுவாசத்தை விட்டுவிடக்கூடாது. இங்கே இயேசு அந்தக் குருடனை அழைத்தவுடன் அவன் தன்னுடைய மேல் வஸ்திரத்தை கழற்றி எறிந்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேல்வஸ்திரம் என்பது குருடர்களுக்காகவே அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது. ஜனங்கள் அந்த வஸ்திரத்தைக் கண்டவுடன் அந்த குருடனுக்கு உதவும்படி ஏதேனும் பணத்தை எடுப்பார்கள். அவன் பக்கத்தில் வந்து அவன் குருடனா என்பதை கண்டுபிடிக்க அவசியமில்லை. அந்த வஸ்திரத்தைப் போட்டிருந்தாலே அவன் குருடன் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள். இயேசு அவனை அழைத்தவுடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்து, இனி யாரும் எனக்கு பிச்சை போட வேண்டாம், எனக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைத்தது, இனி நான் அநேகருக்கு கொடுப்பேன் என்று விசுவாசித்து ஓடினான். ஆண்டவர் அவனிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபோது, “நான் பார்வையடைய வேண்டும்” என்று சொன்னான். அவன் பணத்தைக் கேட்காமல் பார்வையைக் கேட்டான். உடனே அவனுக்கு இரண்டு கண்களும் திறந்துவிட்டது, அற்புதம் நடந்தது. வேதவசனம் இவ்வாறு சொல்லுகிறது: “என்னை நோக்கிக் கூப்பிடு, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நான் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை நாம் விசுவாசிக்க வேண்டும். அந்த குருடன் பார்வையடைந்த பின்பு இயேசுவின் பின்னால் சென்றான். ஆகவே அவன் ஏழையாக இருந்திருக்கமாட்டான். ஏனெனில் பேதுரு, யாக்கோபு, யோவான் இவர்கள் எல்லாரும் இயேசுவின் பின்சென்று பெரிய பணக்காரர்களாக மாறினார்கள். ஆகவே நிச்சயமாக அவனும் பெரிய பணக்காரனாய் மாறியிருப்பான்.

 

கர்த்தர் நமக்காக நிறைய ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். அதை பலவந்தம்பண்ணுகிறவர்கள் சுதந்தரிக்கிறார்கள், உலகத்திற்கு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள். இங்கே பர்திமேயு அப்படிப்பட்டவனாய் மாறினான். அவன் மாறினதிற்கு முக்கியமான காரணம் எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் அவனுடைய பிடிவாதமும், இயேசுவைப் பற்றிக்கொண்டு விசுவாசித்ததும் போன்றவை ஆகும். அதனால் அவன் பார்வையடைந்து விடுவிக்கப்பட்டான். நாமும் கர்த்தர் வைத்திருக்கிற சுகத்தைப் பற்றிக்கொண்டு, சுகம் என்னுடையது என்று உரிமைப்பாராட்ட வேண்டும். பிசாசுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது. தேவன் நம்மை நிரந்தரமான சுகத்தினாலும், ஆரோக்கியத்தினாலும் நிரப்பி அவருக்கு சாட்சிகளாய் வாழ உதவி செய்வார்.   

 

  

 

 

  

 

 

 

Book your tickets