24.01.2021 | ஆத்தும ஆதாயம் – நித்திய ஜீவ வாக்கியங்கள் | Rev. Harris

24.01.2021

ஆத்தும ஆதாயம்

நித்திய ஜீவ வாக்கியங்கள்

 

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).

 

தேவனுடைய கடைசி பாரம் என்னவென்றால், உலகமெங்கும் சென்று ஆத்தும ஆதாயம் செய்வதாகும். கர்த்தர் பரமேறி சென்றுவிட்டார், அவருடைய மக்கள் கர்த்தருக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் நம்முடைய பங்கு மிகவும் அவசியம். இயேசு நமக்காக சிலுவையில் மரித்து, நரகத்திற்குச் சென்று மூன்று நாட்கள் வாதிக்கப்பட்டார். அதன் மூலமாக நம்முடைய ஆத்துமாவை நரகத்திற்கு தப்புவித்து, பரலோகத்தில் நமக்கு ஒரு இடத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். ஆகவே அவருக்காக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் ஒவ்வொரு விசுவாசிக்கும் இருக்க வேண்டும். கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு நபரைச் சற்றி சுழலுகிறது. அவர் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஒரு விசுவாசி தன்னுடைய தகுதியை வைத்து சுழலாமல் இயேசுவினுடைய சிலுவையை கருத்தில் கொண்டு அவரைச் சுற்றி சுழல வேண்டும். எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல், “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய சிலுவையை அல்லாமல் வேறொன்றைக் குறித்தும் மேன்மைபாராட்டாதிருப்பேனாக” என்று சொல்லுகிறார். இரட்சிக்கப்பட்ட தேவ ஜனங்கள், வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி எங்களுடைய கண்களைத் திறந்தருளும் என்று ஆண்டவரிடம் ஜெபிக்க வேண்டும்.

“அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து…” (லூக்கா 24:45).

 

இங்கே சீஷர்களுடைய மனதை ஆண்டவர் திறந்தார் என்று வேதவசனம் சொல்லுகிறது. கர்த்தர் திறந்தால் ஒழிய ஆவிக்குரிய காரியங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. வெளியே மாம்சத்தில் கண்கள் இருப்பதைப்போல ஆவிக்குரிய மனதிலும் கண்கள் இருக்கிறது. கர்த்தர் அதைத் திறந்து பிரகாசமாக்க வேண்டும். தேவனுடைய சத்தியத்தினாலே, கல்வாரி அன்பினாலே அதை நிரப்ப வேண்டும். கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கி, வியாதி, சாபம், தரித்திரம் என எல்லா வேதனைகளுக்கும் நம்மை நீங்கலாக்கி விட்டது. “இழந்துபோனதைத் தேடவும், இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் உலகிற்கு வந்தார்” என்று வேதவசனம் சொல்லுகிறது. மனிதன் எதை இழந்துபோனான்? அவன் பரலோகத்தை இழந்துபோகவில்லை. பூலோகத்திலே பரிசுத்தம், ஐசுவரியம், ஆரோக்கியம், ஆசீர்வாதம், உயர்ந்த வாழ்க்கை இவற்றையெல்லாம் இழந்துபோனான். இரட்சிப்பினுடைய முதலாவது நோக்கமே மனிதன் இழந்துபோனதை திரும்பத் தருவதுதான். இரண்டாவதாகத்தான் பரலோகம்.

 

“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்” (மத்தேயு 19:16-17).

 

இங்கே இயேசு கிறிஸ்து நித்தியஜீவனைக் குறித்து பேசுகிறார். நித்தியஜீவன் என்பது நாம் மரித்த பிறகு தேவனோடு வாழப்போகிற ஒரு நித்திய வாழ்க்கை. இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் இந்த நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள், மற்றவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். ஆனால், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாய் இருக்கிறது. கேட்டுக்குப் போகிற வாசலின் வழியோ விசாலமாயிருக்கிறது; அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்” என்று இயேசு சொன்னார். ஆகவே நித்தியஜீவனை அடைய வேண்டுமானால் இயேசு தான் ஒரே வழி. மனிதனை தேவனைப்போல மாற்றவே இயேசு மனிதனாக இந்த பூமிக்கு வந்தார். வேதத்தில் மூன்று காலங்கள் இருக்கிறது. முதலாவது பழைய ஏற்பாடு, இரண்டாவது இடையேற்பாடு, மூன்றாவது புதிய ஏற்பாடு. ஆகவே புதிய ஏற்பாடு மத்தேயு என்கிற அதிகாரத்திலிருந்து தொடங்கவில்லை. இயேசு உயிர்த்தெழுந்ததிற்குப் பிறகு வரும் அதிகாரங்கள் தான் புதிய ஏற்பாடு. இயேசு இந்த இடையேற்பாட்டுக் காலத்தில் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். இயேசு இன்னும் சிலுவைக்குப் போகவில்லை, மரிக்கவில்லை. ஆகவே இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொள் என்று சொல்ல அன்றைக்கு வழியில்லை. எனவே அவர்கள் கற்பனைக்கு உண்மையாய் இருந்தால் நித்தியஜீவனுக்குள் போகலாம் என்ற நியமனம் கொடுக்கப்பட்டிருந்தது. இயேசு வராத நாட்களில் இயேசுவைப் பற்றி பேச முடியாது. இந்த நாட்கள் வேறு, அன்றிருந்த நாட்கள் வேறு. கற்பனைகளைக் கைக்கொள் என்று சொல்லுகிறார். வேதப்புத்தகம் கிறிஸ்தவ மதப்புத்தகம் அல்ல, அது நித்திய ஜீவ புத்தகம். நாம் தினந்தோறும் செய்தித்தாளை வாங்குகிறோம். ஒருமுறை படித்துவிட்டால் பிறகு அதை தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால் வேதப்புத்தகத்தை எத்தனை வருடங்களாக படித்தாலும் அதில் புதுப்புது காரியங்களோடு ஆவியானவர் நம்முடன் பேசிக்கொண்டே இருப்பார். தேவன் தம்மை எப்போதும் கற்பனைகளுக்குள்ளே அடைத்து அவ்விதமாக வேதப்புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் எத்தனை அதிகாரங்கள் நாள்தோறும் வாசிக்கிறோம் என்பது முக்கியமல்ல. தேவனை காண்கிறோமா என்பதுதான் முக்கியம். இயேசுவை நாம் வேதப்புத்தகத்தில் காணலாம். 2 கொரிந்தியர் 3:3-இன்படி ஆவியாயிருக்கிற தேவன் ஆவியாயிருக்கிற வார்த்தைக்குள்ளே அடங்கியிருக்கிறார். அதை வாசிக்க, வாசிக்க அந்த ஆவியின் வல்லமை நம்முடைய ஆவியை மாற்ற ஆரம்பிக்கிறது, மனிதன் தேவனைப்போலவே மாறுகிறான்.

 

“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங்கீதம் 1:2-3).

 

வேதவசனத்தை வாசித்து அதை தியானிக்கும்போது கர்த்தர் நம்மோடிருந்து நாம் செய்கிற எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுகிறார்

 

“வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே” (யோவான் 5:39).

 

இயேசு இந்த வார்த்தைகளை பழைய ஏற்பாட்டு மனுஷனிடம் சொல்லுகிறார். அவர்களுக்கு வேதவாக்கியங்கள் மட்டும் தான் கொடுக்கப்பட்டது. இன்றைக்கு நமக்கு வேதவாக்கியம் மட்டுமல்ல, ஜீவ அப்பமாகிய இயேசுவும் கொடுக்கப்பட்டுவிட்டார். வேதவாக்கியங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் என்னைக் காணலாம் என்று இயேசு சொல்லுகிறார். வேதவசனத்தைப் படிக்கும்போது நாம் கர்த்தரிடம் இன்னும் அதிகமாய் நெருங்குகிறோம். வேதவசனத்தில் அக்கறை இல்லாமல் இரவு ஜெபம், உபவாசம் என இருந்தாலும் பிரயோஜனமில்லை. தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றுதான். “ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது” என்று வேதவசனம் சொல்லுகிறது. தேவன் வார்த்தைக்கு இவ்வளவாக முதலிடம் கொடுத்திருக்கிறார். ஆகவே நாம் தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கும்போது தேவன் நமக்கு முதலிடம் கொடுப்பார். “…உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங்கீதம் 138:2) என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில், ‘உமது நாமத்தை’ என்ற பதம் வருகிறது. நாமம் என்பது நபரைக் குறிக்கிறது. அப்படியென்றால் தேவன் தம்மைக் காட்டிலும் தம்முடைய வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார். நாமும் தேவனுடைய வார்த்தையை கனப்படுத்தும்போது தேவன் நம்மை கனம்பண்ணுகிறார். இங்கே அந்த மனிதன் இயேசுவிடம் வந்து, “நித்தியஜீவனைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான். அதற்கு இயேசு கற்பனைகளை கைக்கொள் என்று சொல்லுகிறார். கற்பனைகள் கொடுக்கப்பட்டது பழைய ஏற்பாட்டில் தான். ஆனால் தேவன் அதற்குள்ளே இருக்கிறார். அந்த பழைய ஏற்பாட்டின் தேவன் தான் புதிய ஏற்பாட்டின் தேவன். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்று வேதவசனம் சொல்லுகிறது. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை கர்த்தர் தான் எழுதினார். அந்த வார்த்தையாகிய இயேசுவே நித்திய ஜீவனாயிருக்கிறார். வேதவசனத்தை நேசித்து அதை தியானிக்கும்போது நம்முடைய வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறும்.

 

“அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்” (லூக்கா 24:42).

 

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களுக்கு தரிசனமாகிறார். ஆனால் அவர்களுக்கு அதில் நம்பிக்கையில்லை. உயிர்த்தெழுந்த சரீரம் சாப்பிடக்கூடிய ஒரு சரீரமாக இருக்கும் என்பதை காண்பிக்கும்பொருட்டாக அவர்களிடம், “சாப்பிட ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்கிறார். அவர்கள் தேனையும், பொரித்த மீனையும் கொடுத்தார்கள்.

 

“அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது” (லூக்கா 24:42-45).

 

இயேசு சிலுவையில் பாடுபடுவதற்கு முன்னால் தன்னுடைய சிலுவை மரணத்தைக் குறித்து பலமுறை சீஷர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அது அவர்களுக்கு புரியவில்லை. இப்போது உயிர்த்தெழுந்த இயேசு மறுபடியும் வேதாகமத்தில் தன்னைக் குறித்து எழுதப்பட்டது நிறைவேறினதை அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். பழைய ஏற்பாட்டில் மோசேயின் நியாயப்பிரமாண புத்தகம் என்பது ஆதியாகமம் முதல் உபாகமம் வரையிலான ஐந்து புத்தகங்கள் ஆகும். மேலும் தீர்க்கதரிசன புத்தகங்களான மற்ற புத்தகங்கள் மற்றும் சங்கீதங்கள் எல்லாமே இயேசுவை முன்னறிவிப்பதற்காகவே எழுதப்பட்டது என்பதைக் கூறி அவர்களுடைய மனதை திறக்கிறார். நாம் வேதத்தை வாசிக்கும்போது தேவனைக் காணும்படி கையில் எடுத்து ஆவியானவர் தாமே நம்முடைய மனக்கண்களை திறக்கும்படி ஜெபிக்க வேண்டும். உலகப்பிரகாரமான காரியங்களைக் காட்டிலும் தேவன் மீது அதிகமாக அன்பு வைக்க வேண்டும். பலவந்தம்பண்ணுகிறவர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். நாம் கேட்பது கிடைக்கும் வரை அதை விசுவாசித்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், “கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்” என்று வேதம் சொல்லுகிறது. நமக்காக நரகத்திற்குள் சென்று பாடநுபவித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து நித்தியஜீவனைத் தந்தவர் நாம் கேட்பதை கொடுக்காமல் இருப்பாரோ? என்று விசுவாசித்து ஜெபிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் உள்ள இஸ்ரவேல் ஜனங்கள் இன்றைக்கு உள்ள சபைக்கு நிழலாட்டமாய் இருந்தார்கள். அவர்களுக்கு மோசே போதகராய் இருந்தார். அன்று கர்த்தர் ஜீவவாக்கியங்களை கற்பலகைகளில் எழுதிக்கொடுத்தார் என்று வேதவசனம் சொல்லுகிறது.

 

“சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே” (அப்போஸ்தலர் 7:38).

 

இங்கே ஜீவவாக்கியம் என்பது நித்தியஜீவனைக் குறிக்கிறது. இன்றைக்கு கற்பலகையில் அல்ல, நமக்குள்ளே இருக்கும் சதையாகிய இருதயத்துக்குள்ளே நித்தியஜீவனைக் குறித்து எழுதியிருக்கிறார். கர்த்தரே இதைச் செய்திருக்கிறார். ஆகவே நாம் நன்றியுள்ளவர்களாக ஆண்டவரைக் குறித்து மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

 

“அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச்சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.” (உபாகமம் 32:46-47).

 

அன்றைக்கு எத்தனையோ மக்கள் இருந்தபோதிலும் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை பிரித்தெடுத்து அவர்களுக்கு இந்த நித்திய ஜீவ வார்த்தைகளை எழுதிக் கொடுத்தார். மற்றவர்களுக்கு அதில் ஒரு எழுத்தாகிலும் தெரியாது. இந்த ஜீவ வார்த்தைகளை கைக்கொள்ளும்போது நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது மட்டுமல்லாமல் பூமியிலும் நம் நாட்கள் நீடித்திருக்கும்.

 

 “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக” (உபாகமம் 6:6-9).

 

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம் அவர் கொடுத்த ஜீவ வார்த்தைகளை தங்கள் பிள்ளைகளுக்கும் கருத்தாய் போதிக்கும்படி கூறினார். மேலும் எப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளை இருதயத்தில் வைக்கும்படியாகவும் வாயிலும், கண்களின் நடுவிலும், கையில் கட்டிக்கொண்டும் இருக்கும்படியாக கூறினார். இவ்வாறு கோடிக்கணக்கான மக்களின் நடுவே இஸ்ரவேல் ஜனங்கள் வேறுபிரிக்கப்பட்டவர்களாக, கர்த்தருடைய பிள்ளைகளாக வாழ்ந்து வந்தனர். அவருடைய வார்த்தையைப் பின்பற்றி கைக்கொண்டவர்கள் நித்தியஜீவனுக்குள் பிரவேசித்தனர். இன்றைக்கு நாமும் கர்த்தருடைய கிருபையால் கோடிக்கணக்கான ஜனங்கள் மத்தியில் வேறுபிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே கர்த்தருடைய வார்த்தையான நித்திய ஜீவ புத்தகத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பது நம்முடைய கடமையாயிருக்கிறது. நம்முடைய பிள்ளைகளுக்கும் சிறுவயதிலிருந்தே கர்த்தருடைய வார்த்தைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

 

“அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்” (உபாகமம் 6:9-11).

 

கர்த்தருடைய வார்த்தையை கைக்கொண்டு நடப்பவர்களுக்கு மேலே குறிப்பிட்டவாறு இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை தருகிறார். எல்லா செல்வங்களும், வளங்களும் நம்மைத் தேடி வரும். நம்முடைய வியர்வையினாலோ, பெலத்தினாலோ அல்ல, அவருடைய வார்த்தையினால் எல்லாம் ஆகும்.

 

“சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது” (1 தீமோத்தேயு 4:8).

 

நாம் சரீரத்திற்காக செலவிடும் எல்லாவித முயற்சிகளும், பயிற்சிகளும் அற்ப பிரயோஜனமுள்ளது. ஆனால் ஆவிக்குரிய முயற்சியும் இருக்கிறது. அவை என்னவென்றால், தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பது, அந்நியபாஷை பேசுவது போன்றவை ஆகும். நேரம் போகவில்லை என்ற வார்த்தையே வாயில் இருக்கக்கூடாது. காலத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தைகளை படிக்கும்போது இந்த உலகத்தில் மட்டுமல்ல, இனி வரப்போகும் நித்தியஜீவனுக்கும் அது ஏதுவாக இருக்கும்; நம்முடைய பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் ஆசீர்வாதமாக இருப்பார்கள். நம்முடைய ஜெபத்திற்கு இதுவரை பதில் வராததினால் கர்த்தர் நம் பட்சத்தில் இல்லை என்று அர்த்தமில்லை. தேவன் தம்முடைய ஒரேபேறான சொந்தக் குமாரனென்றும் பாராமல் அவரை நமக்காகத் தந்தார். அவரையே தந்தவர் மற்ற எல்லாவற்றையும் தருவது அதிக நிச்சயம். இதை விசுவாசித்து நாம் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் வரை கேட்க வேண்டும்.

 

“அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

 

இயேசுவே நித்தியஜீவனுக்கு வழியாய் இருக்கிறார். ஆகவே அவருடைய வார்த்தைகளை நேசித்து வாசிக்கும்போது ஆவியானவர் நம்முடைய மனக்கண்களைத் திறந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.  

Book your tickets