“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).
“வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; அந்த அதிகாரத்தை நான் உங்களுக்குத் தருகிறேன்” என்று இயேசு சொல்லுகிறார். இங்கே இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு ஒரு விசுவாச வார்த்தையை ஊன்றுகோலாக சொல்லுகிறார். அவர் தன்னுடைய அதிகாரத்தை சீஷர்களிடத்தில் கொடுத்துவிட்டு பரமேறப்போகிறார். அங்கே பிதாவின் வலதுபாரிசத்தில் உட்காரப்போகிறார். அதற்கு முன்பு சீஷர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உலகமெங்கும் சென்று சுவிசேஷத்தை அறிவிக்குமாறு இயேசு கட்டளையிடுகிறார்.
“அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்” (ஏசாயா 53:11).
மனிதன் இந்த உலகத்தில் பிறக்கும்போது அநீதிமானாய் பிறக்கிறான். ‘அநீதி’ என்பது ‘சரியானதல்ல’ என்று பொருள்படும். ‘நீதி’ என்பது சரியானதொன்றைக் குறிக்கும். இன்றைக்கு மக்கள் வெவ்வேறு சாதி, வெவ்வேறு சமுதாயம், வெவ்வேறு மதங்களில் இருக்கிறார்கள். ஆனால் இயேசு தம்முடைய சீஷர்களிடம், “நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுப்போய் சகல ஜாதியையும் என்னுடைய சீஷராக்குங்கள், நீதிமான்களாக்குங்கள்” என்று சொன்னார். அதாவது, அவர்களை தேவனுடைய பார்வையிலே சரியான இடத்தில் கொண்டுவந்து நிறுத்துங்கள் என்று சொன்னார். அது எப்படி நடக்கும் என்பதை பரிசுத்த ஆவியானவர் இந்த வசனத்தைக் கொண்டு சொல்லுகிறார். “என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்”. ஒரு அநீதிமான் நீதிமானாய் மாறுவதற்கு தேவன் வைத்திருக்கும் ஒரே வழி தேவனைக் குறித்த அறிவை அறிவதாகும். பலவிதமான அறிவுகள் இந்த உலகத்தில் இருக்கிறது. வான ஆராய்ச்சி, பூமி ஆராய்ச்சி, கடல் ஆராய்ச்சி என எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து மனிதன் அறிவிலே தேறிக்கொண்டு போகிறான். ஆனால் மனிதன் பரலோகத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவன் நீதிமானாய் மாற வேண்டும். நரகத்திற்கு தப்ப வேண்டுமானால் அவன் தேவனுடைய பார்வையிலே சரியான இடத்தில் இருக்க வேண்டும். தேவனைக் குறித்த அறிவு மாத்திரமே மனிதனை நரகத்திற்கு தப்புவித்து பரலோகத்திற்கு நேராக வழிநடத்தும். மனிதன் நீண்ட வாழ்க்கை வாழும்படியாக படைக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திலே 80 அல்லது 90 ஆண்டுகள் வாழ்ந்து கண்ணை மூடினாலும் மறுவாழ்வு என்பது நிச்சயமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த மறுவாழ்விலே அவரோடுகூட பரலோகத்திலே இருப்பார்கள், மற்றவர்கள் நரகத்திலே தள்ளப்படுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே தாசனாகிய நீதிபரர் இயேசுவைக் குறித்து மக்களுக்கு அறிவிப்பதே நம்முடைய இலட்சியமாய் இருக்க வேண்டும்.
“பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்கு 16:15).
இயேசு இந்த உலகத்தை விட்டு பரமேறிப் போகும்போது மனிதனை நீதிமானாக்குவதற்கான வழியைச் சொல்லுகிறார். சுவிசேஷத்தை எல்லா மக்களுக்கும் சொல்லிக் கொடுப்பதே அந்த வழியாகும். உலகமெங்கும் போய் இயேசுவைப் பற்றி சுவிசேஷம் சொல்லும்போது தேவனைக் குறித்த அறிவு மக்களுக்கு வருகிறது. சுவிசேஷம் என்பது என்ன?
“இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்” (ரோமர் 16:26).
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை சொல்லுவதே சுவிசேஷமாகும். உலகமெங்கும் சென்று இந்த சுவிசேஷத்தை நாம் அறிவிக்க வேண்டும். அதற்காகவே அவர் நம்மை அழைத்திருக்கிறார். நம்முடைய நோக்கம் ஒரு அநீதிமானை நீதிமானாக்கி சீஷராக்குவதாகும். மேலும் ஒரு மனிதனை நரகத்திலிருந்து விடுதலையாக்கி பரலோகத்திற்கு கொண்டுபோவது, பிசாசின் பிடியிலிருந்து தப்ப வைத்து தேவனுடைய பிள்ளையாக மாற்றுவதே நம்முடைய நோக்கமாகும். இவையெல்லாமே தேவனைக் குறித்த அறிவுக்குள்ளே இருக்கிறது. அதைத்தான் ‘சுவிசேஷம்’ என்று வேதம் அழைக்கிறது. தேவனைக் குறித்த நற்செய்தி என்ன? தேவன் எப்போதும் அன்பாகவே இருக்கிறார் என்று 1 யோவான் 4:8-இல் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய அன்பைக் குறித்த நற்செய்தி தான் சுவிசேஷம். அந்த சுவிசேஷம் தான் ஒரு மனிதனை மாற்றியமைக்கிறது; நரகத்திற்குச் செல்ல வேண்டிய மனிதனை தூக்கியெடுத்து பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்கிறது. அவ்வளவு வல்லமை இந்த சுவிசேஷத்தில் இருக்கிறது.
“அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4:8).
இங்கு தேவன் அன்பாக இருக்கிறார் என்று எழுதப்படவில்லை. தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்பைத் தவிர வேறொன்றும் தேவனிடம் இல்லை. உதாரணமாக ஒரு டம்ளர் முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து ஒருவர், “தண்ணீரைத் தவிர வேறு எதுவுமே அதில் இல்லை” என்று சொன்னார். அதேபோல் தான் தேவனிடம் அன்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அவர் நம்மீது எப்போதும் அன்பாகவே இருக்கிறார். இந்த உலகம் அன்புக்காக மனிதர்களை எதிர்பார்த்து ஓங்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நற்செய்தி என்னவென்றால், வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் நம்மீது அன்பாகவே இருக்கிறார். நாம் சில வேளைகளில் பிரச்சனைகளின் ஊடே கடந்து சென்றாலும் அந்த பிரச்சனைகளைத் தீர்க்க தேவன் வல்லவராயிருக்கிறார். தேவனாலே எல்லாம் கூடும். இந்த நற்செய்தியானது பிசாசின் பிடியிலிருக்கிற ஒருவனை தேவனுடைய பிள்ளையாக மாற்றுகிறது. அன்பில்லாத இந்த உலகத்திலே பரிசுத்தமான, தூய்மையான அன்பு, உலகத்தில் எங்கும் கிடைக்காத அன்பு இந்த தேவனிடத்தில் இருக்கிறது. மனிதர்களுடைய உயிரைப் பறிக்கிற மக்கள் ஆயிரமாயிரமாய் இந்த உலகத்திலே வாழும்போது தன்னுடைய உயிரை மனுக்குலத்துக்காக தியாகம் செய்தவர் தான் தேவன். இவர் அன்பின் தேவன் என்று வேதம் சொல்லுகிறது.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16).
தேவனைப் பற்றி பலர் பலவிதமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சத்திய வேதம் தேவனைக் குறித்த சரியான அறிவை நமக்குக் காட்டுகிறது. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனாகிய அழியாத ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி இயேசு கிறிஸ்துவை கல்வாரி சிலுவையில் பலியாக தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். ஏனென்றால் ஒரு மனிதன் பாவத்தில் தான் பிறக்கிறான். பாவம் என்றால் ஒரு தகப்பனும், தாயும் சேர்த்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது அல்ல. அது பாவம் கிடையாது. முதல் மனிதனாகிய ஆதாம் செய்த பாவமானது இந்த மனுக்குலத்தை பற்றிக்கொண்டது. அதன் மூலம் உலகத்தில் பிறக்கிற எல்லோருமே அவனுடைய பாவத்திலே பிறக்கிறார்கள். அந்த பாவத்திற்கு தண்டனை இருக்கிறது. ஆனால் தேவன் மனிதனை தண்டிக்கவில்லை. தம்முடைய குமாரனாகிய இயேசுவை கல்வாரி சிலுவையில் நம்முடைய பாவத்திற்காக தண்டித்தார். பாவமே இல்லாத இயேசு நமக்காக கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தினார். அவர் தண்டிக்கப்பட்டபடியினாலே நமக்கு தண்டனை இல்லை. அதற்குப் பதிலாக இரட்சிப்பு வந்தது. சிலர், “நல்ல காலம் எப்போது வரும்?” என்று அங்குமிங்கும் கேட்டு அலைகிறார்கள். ஆனால் நமக்கு இயேசுவின் மூலமாக எப்போதோ நல்ல காலம் வந்துவிட்டது. இயேசுவின் மூலமாக நாம் தண்டனையிலிருந்து தப்பி பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு இரட்சிப்பு, பாவமன்னிப்பு எல்லாமே இலவசமாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமாதானம், பரலோகத்தில் ஒரு இடம் எல்லாமே இலவசம். இவை எல்லாமே மனிதனுக்கு இலவசமாய் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் மனிதன் எந்த கிரயத்தைக் கொடுத்தாலும் பாவமன்னிப்பு, இரட்சிப்பு முதலானவற்றை பெற்றுக்கொள்ள முடியாது. தேவன் என்றால் தண்டிப்பார் என்ற எண்ணம் தான் மனிதர்களுடைய மனதிலே மேலோங்கி நிற்கிறது.
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8).
நாம் பாவிகளாய் இருந்தால் நாம் தான் மரிக்க வேண்டும். ஆனால் நமக்குப் பதிலாக தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை பலியாக கல்வாரி சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். அந்த தேவனின் அன்பைக் குறித்த அறிவு, மனிதன் மீது உள்ள அக்கறை, விருப்பம் இவற்றைப் பற்றின அறிவை மக்களுக்குள் ஊட்டும்போது அநீதிமானாய் இருக்கிற ஒருவன் நீதிமானாய் மாறுகிறான். அவன் எவ்வளவு பெரிய அநீதியான காரியத்தைச் செய்திருந்தாலும் பரவாயில்லை, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய அன்பு மனிதனின் பாவத்தைக் காட்டிலும் மிக மிக பெரியது. மனிதன் நீதிமானாய் மாறுவதற்குச் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாகும். அவரைக் கூப்பிடும்போது நிச்சயமாய் நமக்கு விடுதலை உண்டு. இதற்காக பெரிய பாவ அறிக்கை எல்லாம் தேவையில்லை. பொதுவாக ஒரு பலியைக் கொடுப்பதற்கு முன்னர் பாவ அறிக்கை செய்வார்கள். ஆனால் நம்முடைய பாவங்களுக்காக ஏற்கனவே இயேசு கிறிஸ்து என்னும் ஒரு பலி தண்டிக்கப்பட்டு விட்டது. ஆகவே பாவத்தின் கதை அதோடு முடிந்துவிட்டது. இன்றைக்கு நாம் அதைப் புரிந்துகொண்டு தேவனின் மகா பெரிய அன்பைக் குறித்த அறிவை எடுத்துச் சொல்ல வேண்டும்.
தேவனுடைய அன்பைக் குறித்து வேதம் இவ்வாறு சொல்லுகிறது:
“கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (ஏசாயா 53:10).
நாம் தான் பாவஞ்செய்து தேவனை விட்டு தூரம் சென்றோம். ஆனால் தேவன் நம்மீது வைத்த அன்பினாலே நம்முடைய பாவத்திற்காக நம்மை தண்டிக்காமல் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை கல்வாரி சிலுவையில் நொறுக்கச் சித்தமானார். அப்படியென்றால் நாம் செய்த பாவங்களுக்காக இயேசுவுக்கு தண்டனை கிடைத்தது; ஆனால் நமக்கோ விடுதலை, சமாதானம், இரட்சிப்பு கிடைத்தது. நம்மை மீட்பதற்காக தேவன் இயேசுவை ஒரு பலியாக உபயோகித்தார். இயேசு சிலுவையில் முடிந்தது என்று சொன்னவுடனே நம்முடைய தண்டனைகள், பாவங்கள் எல்லாம் முடிந்தது. இனி எந்த மனிதனையும் தேவன் பாவி என்ற கோணத்தில் பார்ப்பதில்லை, நண்பன் என்ற முறையில் தான் பார்க்கிறார்.
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5).
இயேசுவுக்கு ஆக்கினைத்தீர்ப்பு, நமக்கு சமாதானம். அவருக்கு ரத்த காயங்கள், அதற்கு ஈடாக நமக்கு விடுதலையும், இரட்சிப்பும், நல்வாழ்வும் கொடுக்கப்படுகிறது. ஆகவே தேவனும் அவருடைய குமாரனும் சேர்ந்து மனுக்குலத்தை பிசாசின் பிடியிலிருந்து விடுதலையாக்கியிருக்கிறர்கள். மனிதனுக்கு வர வேண்டிய தண்டனைகள் அனைத்தையும் தேவன் இயேசுவின் மேலே வைத்து மனிதனுக்கு ஒரு பெரிய விடுதலையையும், சுயாதீனத்தையும் கொடுத்திருக்கிறார். அதுதான் இரட்சிப்பு. இதைத்தான் நற்செய்தி என்று வேதம் சொல்லுகிறது. எல்லோருக்குமே இரட்சிப்பு என்பது இலவசம்.
“அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்” (ஏசாயா 53:11).
சில மொழிபெயர்ப்புகளில் அவர் தமது கர்ப்பவேதனையின் பலனைக் கண்டு திருப்தியாவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. பிரசவ வேதனை என்பது கடுமையான ஒரு வேதனை. அந்த வேதனையை அனுபவித்து தான் ஒரு தாய் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். அதன்பின்பு அந்த வேதனையின் துக்கத்தை மறந்துபோகிறாள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பெண்களைப்போல கொஞ்ச இரத்தத்தை சிந்தவில்லை, அவர் தமது கடைசி சொட்டு இரத்தத்தையும் கல்வாரி சிலுவையில் சிந்தி நம்மைப் பெற்றெடுக்கிறார். ஒரு அநீதிமானாய் இருக்கிற மனிதன் நீதிமானாய் மாற வேண்டுமானால் ஒரு தாய் பிரசவ வேதனைப்பட்டு பிள்ளையைப் பெற்றெடுப்பது போல் இயேசுவும் கல்வாரி சிலுவையில் ஒரு தாயைப்போல பாடுபட வேண்டியிருந்தது. இயேசு கிறிஸ்துவின் அந்த பாடுகளுக்குள்ளேயிருந்து இன்றைக்கு மனிதர்கள் தேவனுடைய பிள்ளைகளாக பிறக்கிறார்கள். பொதுவாக சிலுவையிலே அடிக்கப்படுகிறவர்கள் ஈட்டியினாலே குத்தப்படுவதில்லை, ஆனால் அவர்களின் காலை முறிப்பார்கள். அவ்விதமாக இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களின் கால்கள் முறிக்கப்பட்டது. போர்ச்சேவகர்கள் இயேசுவினிடத்தில் வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே மரித்திருந்தார். ஆகவே அவர்கள் அவருடைய காலை முறிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஈட்டியை வைத்து அவருடைய விலாவிலே குத்தினார்கள். விலாவிலிருந்து இரத்தமும், தண்ணீரும் கலந்து வந்தது என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அந்த ஈட்டியானது இயேசுவினுடைய இருதயத்தை தொட்டது. கடைசி சொட்டு இரத்தம் தண்ணீரோடு கலந்து வந்தது. இயேசு நம்மை பெற்றெடுப்பதற்காக, நம்மை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றுவதற்காக, நம்மை நரகத்திலிருந்து தப்புவிப்பதற்காக நமக்கு பரலோகத்தில் ஒரு அரண்மனையை ஆயத்தம்பண்ணுவதற்காக தம்மை பலியாக்கி, தம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிலுவையில் சிந்தினார். இது ஒப்பற்ற, விவரிக்க முடியாத அன்பு. இந்த உலகத்தில் இருக்கிற அன்பை வைத்து பரலோகத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் தேவ அன்பு என்பது உண்மையானது. தேவன் நம்மீது அன்பாகவே இருக்கிறார். எந்தவொரு தகப்பனைக் காட்டிலும், மனைவியைக் காட்டிலும், எவரைக் காட்டிலும் தேவன் நம்மீது அன்பாகவே இருக்கிறார். இந்த அன்பின் நற்செய்தியைக் குறித்த அறிவு மனிதனுக்கு வரும்போது அவன் நீதிமானாய் தேவனுடைய பிள்ளையாக மாறுகிறான்.
இயேசு கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்தார் என்று வேதம் சொல்லுகிறது. ‘கெத்செமனே’ என்றால் ‘செக்கு’ என்று அர்த்தம். எப்படி திராட்சைப்பழங்களை செக்கு ஆலைகளில் கொட்டி அதின் சாற்றைப் பிழிந்தெடுக்கிறார்களோ, அதுபோல இயேசு பாடுகளினாலே பிழிந்தெடுக்கப்பட வேண்டும். அங்கு இயேசுவின் இரத்தம் வியர்வை நாளங்கள் வழியாக பீறிட்டு வெளியே அடித்தது என்று வேதம் சொல்லுகிறது.
“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44).
இயேசு பாவம் செய்ததினால் தண்டிக்கப்படவில்லை, அவர் ஒரு பாவமும் அற்றவராய் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையிலே செக்கில் பிழியப்படுவது போல் பாடுபட்டார். விஞ்ஞான ரீதியாக ஒரு மனிதனுக்கு அளவுக்கு அதிகமான கவலை அழுத்தும்போது இரத்த நாளங்கள் வெடித்து வியர்வைத் துவாரம் வழியாக வெளியே வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். இங்கே இயேசுவுக்கு சொல்லொண்ணா மன அழுத்தம். அது என்னவென்றால், முதல் மனிதனாகிய ஆதாமின் பாவத்திலிருந்து எல்லோருடைய பாவமும் ஒரு மனிதனாகிய இயேசுவின் மேலே சுமத்தப்பட்டது. அவர் மீது உலகத்தின் பாவமெல்லாம் சுமத்தப்பட்டபடியினால் தாங்க முடியாத பாரத்தினால் இரத்த நாளங்கள் வெடித்து வியர்வைத் துவாரங்கள் வழியாக இரத்தம் வெளியே கொட்டியது. இரத்த ஆறு கெத்செமனே தோட்டத்தில் ஓடினது. தேவனுடைய இரத்தம் புனிதமானது, அது அவருடைய குடும்பத்திலே நம்மை சேர்க்கிறது.
“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:12-13).
பிசாசின் குடும்பத்திலிருந்து வெளியே வந்து தேவனுடைய குடும்பத்தில் சேர வேண்டுமானால் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவரை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறும் அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சாதாரணமாக ஒரு பிள்ளை பிறப்பதைப்போல ஒரு புருஷனின் சித்தத்தினால் பிறப்பதல்ல. இவர்கள் தேவனுடைய சித்தத்தினாலே பிறந்தவர்கள். தேவன் நம்மீது முந்தி அன்புகூர்ந்து இயேசுவை பலியாக ஏற்படுத்தி நம்முடைய பாவங்களை இயேசுவின் இரத்தத்தால் கழுவி நம்மை தேவனுடைய பிள்ளைகாளக மாற்றினார். நாம் தேவனுடைய வித்தினாலே பிறக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய வித்து. அந்த வித்தாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி இவ்வளவாய் நம்மீது அன்புகூர்ந்தார்.
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்” (யோவான் 12:24).
ஒரு கோதுமை மணி தரையில் விழுந்து மடியாவிட்டால் அது தனியாக இருக்கும். ஆனால் அது தரையில் விழுந்து மடியும்போது ஒரு கோதுமை நூறு கோதுமையை விளைவிக்கிறது. அதுபோல இயேசு கல்வாரி சிலுவையில் கோதுமை மணியைப்போல பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார். அதனால் இன்றைக்கு அநேகர் தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார்கள். இயேசு தேவனுடைய பிள்ளை, இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களும் தேவனுடைய பிள்ளைகள். தேவனுடைய வித்தினாலே இவர்கள் பிறந்திருக்கிறார்கள், தேவனுடைய இருப்பிலிருந்து வந்திருக்கிறார்கள். தேவனைப் போன்ற பரிசுத்த வாழ்க்கை இவர்களுடைய வாழ்க்கையாக இருக்கிறது. “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” என்று வேதம் சொல்லுகிறது. இன்றைக்கு மனிதன் சமாதானத்திற்காக தேடி அலைகிறான். அதற்காக லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து உலகை சுற்றி வருகிறான். ஆனால் சமாதானம் கிடைக்கவில்லை, பாவமன்னிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இயேசுவிடம் வரும்போது பாவமன்னிப்பு, சமாதானம் எல்லாமே இலவசமாக கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட அன்பை மனிதர்களுக்கு சொல்லுவதுதான் ஆத்தும ஆதாயம். இயேசு தேவனுடைய வித்து. மனிதனுடைய ஆவியானது ஒரு கருவைப்போல் இருக்கிறது. இயேசுவாகிய வித்து மனிதனுடைய ஆவி கருவினுள் விழும்போது ஒரு மறுபிறப்பு உண்டாகிறது. பழைய இருதயம் மாறி புது இருதயம் உருவாகிறது. ஒரு மனிதனுக்கு உலகப்பிரகாரமான அறிவு மிகுதியாக தேவையில்லை. ஆனால் இயேசுவைக் குறித்த அறிவை, சிலுவையைக் குறித்த அறிவை, தேவ அன்பைக் குறித்த அறிவைப் பற்றி மக்களுக்கு சொல்லுவோமானால் அதினால் மிகுதியான பலன்களை வாழ்க்கையில் காணலாம்.
“போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்” (மத்தேயு 27:32).
சிரேனே ஊரானாகிய சீமோன் தற்செயலாக அந்தப்பக்கம் போகிறான். அவனைப் பிடித்து பலவந்தம் செய்து இயேசுவின் சிலுவையை அவன் மீது சுமத்துகிறார்கள். ஏனென்றால் இயேசுவால் அவருடைய சிலுவையை சுமந்துகொண்டு கொல்கதாவுக்குப் போக முடியவில்லை. கொல்கதா என்பது உயரமான மலை, அந்த மலைப் பாதையில் இயேசுவால் சிலுவையை தூக்கிக்கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் ஏராளமான இரத்தம் ஏற்கனவே சிந்தப்பட்டுவிட்டது. அவருடைய பெலன் குறைந்துபோனது. வாரடியும், முள் முடியும் அவருடைய பெலத்தை திருடிவிட்டது. ரோமருடைய வாரானது மூன்றாக பிரிந்து ஒன்பது துணைப்பிரிவுகளாக பிரிந்திருந்தது. ஒன்பது வாரின் நுனியிலும் ஒன்பது ஈயக்கொக்கிகள் மாட்டப்பட்டிருந்தது. ஒரு போர்ச்சேவகன் இயேசுவின் முதுகில் ஓங்கி அடிக்கும்போது முதுகின் 9 இடத்தில் அந்த ஈயக்கொக்கிகள் பிடித்துக்கொண்டது. சிறிது நேரம் சென்று அதை இழுக்கும்போது 9 இடங்களிலும் மாம்சத்துண்டுகள் பிய்த்துக்கொண்டு வந்தது. இது மிகவும் கோரமான காட்சி. இவ்விதமாக 39 முறை இயேசு வாரினாலே அடிக்கப்பட்டார். மொத்தம் 351 அடி இயேசுவின் முதுகிலே விழுந்து, அவருடைய மாம்சத்துண்டுகள் பிய்க்கப்பட்டு இரத்தம் ஆறாக ஓடியது. அதில் அவருடைய பெலனெல்லாம் குறைந்துபோனது. அதுமட்டுமல்ல, தலையில் வைக்கப்பட்ட முள்முடியும் அவரது பெலத்தை குறைத்தது. அந்த முள்ளானது எருசலேமின் காடுகளில் 11/2 அங்குலம் கொண்டதாக வளர்ந்து கிடந்தது. அந்த முள் முடியை தலையில் வைத்து லத்தியால் அடித்தார்கள். இயேசுவுக்கு கிரீடம் சூட்டுகிறோம் என்று சொல்லி முள்கிரீடத்தை சூட்டி பரியாசம் செய்தார்கள். இயேசுவின் கண்களுக்கு ஊடே அந்த முள் பாய்ந்திருக்கும், மூளையில் இறங்கியிருக்கும். அவரது தலையிலிருந்து இரத்தம் ஆறாய் ஓடியது. ஆகவே அவர் சிலுவையை கொல்கதா மலைக்கு தூக்கிச் செல்ல முடியாத நிலையில் பெலவீனராய் காணப்பட்டார். நாம் சமாதானத்தைப் பெறும்படியாக, தேவனுடைய குடும்பத்தில் சேரும்படியாக இயேசு அத்தனை பாடுகளையும் சகித்தார். இதன் மூலம் நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறியிருக்கிறோம். இந்த அன்பை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள் என்று கர்த்தர் போதிக்கிறார்.
“மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்” (ஏசாயா 52:14).
சரித்திரத்தில இயேசு மாத்திரம் சிலுவையில் அறையப்படவில்லை. பல நூறு பேர் சிலுவையில் அறையப்பட்டார்கள். ஆனால் இங்கே இயேசுவைப் பற்றி மாத்திரம் ஒரு உண்மை சொல்லப்பட்டிருக்கிறது. அவரைப் பார்த்து அநேகர் ஆச்சரியப்பட்டார்கள். ஏனெனில் அவருடைய முகப்பார்வையும், முக ரூபமும் அந்தக்கேடு அடைந்து, இவர் மனிதன் தானா என்கிற அளவுக்கு அது கொடூரமாய் இருந்தது. இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானகன் இயேசுவைப் பார்த்து சொன்னார். மனிதர்கள் அவரவர் பாவத்திற்காக சிலுவையிலே தொங்கினார்கள். ஆனால் இயேசு அகில லோகத்தின் பாவங்களை தம்மீது போட்டுக்கொண்டு உலகத்தின் பாவத்திற்காக அடிக்கப்பட்டார். ஆகவேதான் அவர் அந்தக்கேடடைந்தார். ஏனெனில் பாவத்திற்கு தண்டனை நிச்சயமாய் உண்டு. ஆகவே எல்லோருடைய பாவத்திற்காக தேவன் இயேசுவை தண்டித்தார்.
“தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே” (சங்கீதம் 69:26).
தேவன் இயேசுவை அடித்தார். அவருடைய அதரிசனமான கரத்தை மனிதர்களால் பார்க்க முடியவில்லை. ரோமப் போர்ச்சேவகர்கள் அடித்ததை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது.
“ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று” (மத்தேயு 27:45).
சூரியன் மறைத்துக்கொண்டது, காரணம் சூரியன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது, பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை தண்டிக்கிற காட்சி சிருஷ்டியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே அது 3 மணி நேரம் மறைத்துக்கொண்டது, அந்தகாரம் உண்டானது. இயேசு எல்லோராலும் கைவிடப்பட்டு தண்டிக்கப்பட்டார். ஆகவே பாவத்தின் தண்டனை இயேசுவோடு கூட முற்றுப்பெற்றது. இயேசு சிலுவையில் “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறுகிறார். கடைசியில் “முடிந்தது” என்று சொல்லி ஜீவனை விட்ட மாத்திரத்திலே தேவனுடைய குடும்பம் பிறந்தது. இயேசுவின் பரிசுத்த இரத்தம் சிந்தப்பட்டபோது தண்டனை முடிந்து தீர்த்த பிறகு பிசாசின் குடும்பத்திலிருந்து மனிதர்கள் தேவனுடைய குடும்பத்திற்கு வருகிறார்கள். இந்த அறிவு மக்களுக்கு வரும்போது இரட்சிப்பைப் பெற்று தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார்கள். ஆகவே இயேசுவின் அன்பைக் குறித்த அறிவிலே நாம் இன்னும் அதிகமதிகாமய் வளர வேண்டும். இதை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். இததான் ஆத்தும ஆதாயம்.
“வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” (ஏசாயா 1:19).
பஞ்சு வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கிறது. அதுபோல தேவன் ஒரு மனிதனை பரிசுத்தவானாக, தேவனுடைய பிள்ளையாக மாற்றுகிறார். கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்ட அந்த சிவந்த இரத்தத்தின் மூலமாக நம்மை சுத்திகரித்திருக்கிறார். அப்போது நம்முடைய வாழ்க்கை பஞ்சைப்போல வெண்மையாக மாறுகிறது. இரட்சிக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளையாய் மாறின ஒரு மனிதனுக்கு தண்டனை இல்லை, அவன் பரலோகத்திற்குச் செல்ல முடியும். இன்றைக்கு மனிதர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என பிரிந்திருக்கிறார்கள். ஆனால் தேவன் எல்லா மனிதர்களுக்கும் இயேசுவின் மூலம் ஒரே வழியைத்தான் வைத்திருக்கிறார். இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இரட்சிப்பு, பாவமன்னிப்பு, சமாதானம் என ஏராளமான நன்மைகள் வந்தடைகிறது. இந்த அன்பை நிச்சயமாய் தேவனுடைய பிள்ளைகள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் ஆத்தும ஆதாயத்திலே வெற்றி பெற முடியும்.