14.03.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 7 | Rev. Solomon

 14.03.2021

சுகம் ஒரு சுதந்தரம் – 7  

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2). 

 

“நானே வாசல், ஒருவன் என் வழியாய் உட்பிரவேசித்தால் அவன் உள்ளும் புறம்பும் மேய்ச்சலைக் கண்டடைவான்” என்று இயேசு சொன்னார். இந்த உலகத்தில் இரண்டு ராஜ்யங்கள் இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. ஒன்று தேவனுடைய ராஜ்யம், அது ஆசீர்வாதமானது. மற்றொன்று பிசாசினுடைய ராஜ்யம், அது சபிக்கப்பட்டது. மனிதர்கள் இந்த உலகத்தில் பிறக்கும்போது விழுந்துபோன ஆதாமுடைய வித்திலே பிறக்கிறார்கள். ஆகவே அவர்கள் சாபமான ராஜ்யத்திற்குள்ளே தான் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்றைக்குமே சாப ராஜ்யத்திற்குள்ளே இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலிருந்து விடுபட்டு ஆசீர்வாதமான தேவ ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் அங்கே இருக்கக்கூடிய பலவிதமான நன்மைகளை அனுபவித்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும். இயேசு அதற்கான வாசலாய் இருக்கிறார். அவரையன்றி வேறு வாசல் கிடையாது. இன்றைக்கு பெரும்பாலான மக்கள் இயேசுவை புறக்கணித்துவிட்டு தேவ ராஜ்யத்திற்குள் பிரவேசித்து ஆசீர்வாதங்களை எடுத்துக்கொள்ள பிரயாசப்படுகிறார்கள். ஆனால் அது தோல்வியில் தான் முடிகிறது. ஏனென்றால் இயேசுவையன்றி ஒருவன் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது. “நானே வாசல், ஒருவன் என் வழியாய் உட்பிரவேசித்தால் அவன் உள்ளும் புறம்பும் மேய்ச்சலைக் கண்டடைவான்” என்று இயேசு சொன்னார். அதாவது புறம்பான ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல, உள்ளான மனிதனாகிய ஆவி மனிதனுக்குரிய ஆசீர்வாதங்களினாலும் நிரப்புவார். உள்ளான ஆவி மனிதனுக்கு பாவமன்னிப்பு, சமாதானம், தேவனோடு உறவு, ஐக்கியம், ஞானம், அறிவு இவையெல்லாம் தேவைப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்களுக்கும் வேண்டிய நன்மைகளை இயேசு அருளுகிறார். இவையெல்லாமே இலவசமாய் தேவனால் அருளப்படுகிறது. தேவனுடைய ஆசீர்வாதங்களை நாம் என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது. தேவன் நம்மை நேசிக்கிறபடியினால் அவரே இரத்தஞ்சிந்தி எல்லா ஆசீர்வாதங்களையும் நமக்கு இலவசமாய் அருளினார். ஆகவே ஆசீர்வாதமான தேவ ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க இயேசுவே வழியாய் இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு எல்லா விதமான நன்மைகளையும், ஈவுகளையும் சுதந்திரமாக வைத்திருக்கிறார். நாம் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்காகவே நம்மை அழைத்திருக்கிறார். இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்துதான் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்குள் நுழைந்தார்கள். செங்கடலை கடந்த சம்பவம் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. ஆகவே நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் எடுத்த பிறகு பாலும் தேனும் ஓடுகிற ஆசீர்வாதமான வாழ்க்கை நமக்கு காத்திருக்கிறது. சிலர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு பாடுகள், சோதனைகள் வரும் என்று சொல்லுகிறார்கள். அப்படியல்ல, நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுத்த பிறகு ஆசீர்வாதங்கள் நமக்காக காத்திருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, துன்பப்படுவது தேவனுடைய சித்தமல்ல. ஒருவேளை கிறிஸ்துவுக்காக நாம் ஒரு சில பாடுகளை அனுபவித்தால் அது என்றைக்குமே இருக்கிற ஒன்றல்ல. “இப்பொழுது இருக்கிற பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவை அல்ல” என்று வேதம் சொல்லுகிறது. ஆவியானவரின் உதவியோடு நாம் கிறிஸ்துவுக்காக அனுபவிக்கும் பாடுகளையும் மேற்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும். தேவன் நமக்காக வெற்றியை மட்டுமே வைத்திருக்கிறார்.

 

“கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங்கீதம் 16:5-6).   

 

சங்கீதக்காரன் ஆவிக்குரிய அறிவு மிகுந்தவனாக இருக்கிறான். கர்த்தர் ஏதோ ஆசீர்வாதங்களை தருகிறார் என்பதற்காக அவர் வேண்டும் என்று அவன் சொல்லவில்லை. கர்த்தர் மட்டுமே எனக்குப் போதும், அவர்தான் என்னுடைய சுதந்தரமாய் இருக்கிறார் என்று சொல்லுகிறான். இவர்கள் தான் தெய்வீகமானவர்கள். சிலர் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் கர்த்தரிடத்தில் வருவார்கள். ஆனால் அப்படி இருக்கக்கூடாது. கர்த்தர் தான் வேண்டும் என்று சொல்லுபவர்களாக நாம் இருக்க வேண்டும். ஆகவேதான் அப்போஸ்தலனாகிய பவுல், “கிறிஸ்து எனக்கு ஜீவன்” என்று சொல்லியிருக்கிறார். நாம் கர்த்தரோடு இணைந்து ஐக்கியம் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.  

 

“இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்” (லூக்கா 19:3-4).

 

இங்கு இயேசுவினிடத்திலிருந்து என்ன கிடைக்கும் என்று சகேயு வகைதேடவில்லை. இயேசுவைப் பார்க்க, அவர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள வகைதேடினான். சகேயு குள்ளமானவன் என்பதால் இயேசுவைப் பார்ப்பதற்கு காட்டத்தி மரத்தின் மேல் ஏறி காத்திருக்கிறான். அவன் மற்றவர்களைப் பற்றி யோசிக்கவில்லை. இயேசுவைக் காண அவ்வளவு வாஞ்சையாயிருக்கிறான். இயேசு அங்கே வரும்போது, “சகேயுவே, நீ சீக்கிரம் இறங்கி வா, இன்றைக்கு உன் வீட்டில் தங்க வேண்டும்” என்று சொன்னார். சகேயுவின் பெயரை யாரும் இயேசுவினிடத்தில் சொல்லவில்லை. ஆனால் இயேசு சரியாக அவனுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார். தம்மைத் தேடுகிறவர்களை கர்த்தர் அறிந்து வைத்திருக்கிறார். சகேயு சந்தோஷமாக இறங்கி இயேசுவினிடத்தில் வருகிறான். அவர், “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது” என்று சொன்னார். இரட்சிப்புக்குள் பாவமன்னிப்பு, சுகம், வெற்றி, ஐசுவரியம், சமாதானம் என எல்லா விதமான நன்மைகளும் அடங்கியிருக்கிறது. இந்த இரட்சிப்பைத்தான் சகேயு பெற்றுக்கொண்டான். இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் பாடுபட்டு, இரத்தஞ்சிந்தி, மரித்து, உயிர்த்தெழுந்து சிறப்பான பங்கையும், சுதந்தரத்தையும் நமக்கு கொடுத்திருக்கிறார். ஆகவே தேவனுடைய மக்கள் இந்த ஆசீர்வாதங்களை சுதந்தரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பரிசுத்தம், ஆரோக்கியம், ஐசுவரியம், வெற்றி முதலான ஆசீர்வாதங்களை நாம் தான் விசுவாசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் விசுவாசித்து எடுத்துக்கொள்ளவில்லை என்றால் நம்மிடம் இந்த ஆசீர்வாதங்கள் வராது. இன்றைக்கு அநேக தேவனுடைய மக்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக வைக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி தெரியாது. ஆனால் நிச்சயமாக அவர்கள் இவைகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கும்போது தேவன் சந்தோஷப்படுகிறார். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதால் என் பிதா மகிமைப்படுகிறார்” என்று இயேசு சொன்னார்.

 

“கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்” (நியாயாதிபதிகள் 2:18).

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து விடுதலையாக்கி அழைத்து வருகிறார். முதலில் மோசே வழிநடத்துகிறார். பின்பு யோசுவா வழிநடத்தி பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை சுதந்தரிக்கிறார்கள். கர்த்தர் அதைப் பார்த்து மகிழுகிறார். அவர்களை நன்றாக வாழ வைப்பதுதான் அவருடைய நோக்கம். நாமும் நன்றாக வெற்றி வாழ்க்கை வாழுவதுதான் தேவனுடைய நோக்கம்.

 

“செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தேன்;” (எரேமியா 2:7).

 

யோசுவாவினுடைய நாட்கள் வரைக்கும் மக்கள் நன்றாக ஆசீர்வாதமாக வாழுகிறார்கள், தேவனும் சந்தோஷப்பட்டார். ஆனால் யோசுவா மரித்த பிறகோ, இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை விட்டுவிட்டார்கள். அவர்கள் விக்கிரகங்களை வணங்கி, ஆசீர்வாதங்களை இழந்து அடிமைத்தனத்திற்குள் போய்விட்டார்கள். புறஜாதிகளான கானானியர், எமோரியர், பெலிஸ்தியர், அம்மோனியர், மீதியானியர் ஆகியோர் இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்குகிறார்கள். இதைப் பார்த்த கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் என்று வேதம் சொல்லுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் அறிவீனத்திற்கு இடங்கொடுத்து அடிமைத்தனத்திற்குள் போய்விட்டார்கள். இப்போது இவர்கள் தான் கர்த்தரிடம் திரும்பி வர வேண்டும். இவர்கள் தான் மன்னிப்பு கேட்டு ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய எதிர்காலத்தை கர்த்தர் அவர்கள் கையில் தான் கொடுத்திருந்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் அறிவீனத்தால் அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள். இன்றைக்கும் நாம் ‘தெரியாது’ என்ற அறிவீனத்திற்குள் போய்விடக்கூடாது. தேவனுடைய வார்த்தைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். நம்முடைய கவனம் முழுவதும் கர்த்தருடைய வார்த்தையின் மேல் பதிந்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளை பார்க்க, பார்க்க அறிவு, விசுவாசம் உண்டாகிறது. கர்த்தர் நமக்காக வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது எளிதாக மாறிவிடுகிறது.

 

“பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை” (கலாத்தியர் 4:1).

 

அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும்போது அது பணக்கார வீடோ அல்லது ஏழை வீடோ அதற்கு வித்தியாசமில்லை. ஆனால் விவரம் தெரிந்த பிறகு, வளர்ந்த பிறகு ஒரு அறிவுக்குள்ளாக வருகிறான். இது என் அப்பா வீடு, இங்கே இருக்கும் சொத்திற்கும், சுதந்தரத்திற்கும் நான் பங்காளி என்ற அறிவு வருகிறது. இப்போது அவன் அடிமை என்கிற ஸ்தானத்திலிருந்து எஜமான் என்கிற ஸ்தானத்திற்கு வந்துவிடுகிறான். இதற்குக் காரணம் ஞான அறிவு. “நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய வார்த்தையின் சத்தியத்தை கேட்க கேட்க நீங்கள் ஆவியிலே வளருவீர்கள். தேவனுடைய வார்த்தை மிக மிக முக்கியமானது. அதைக் கவனிக்கும்போது தேவனுடைய ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரித்துக்கொள்வது எளிதாக மாறிவிடுகிறது.

 

“இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்” (அப்போஸ்தலர் 20:32).

 

இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபை மக்களுக்கு கிட்டத்தட்ட 21/2 ஆண்டுகளாக ஊழியம் செய்தார். அவர் எருசலேமுக்குப் போக வேண்டிய சமயம் வந்தபோது அந்த சபை மக்களிடம், “இனி என் முகத்தைக் காணமாட்டீர்கள்” என்று சொன்னார். உடனே எபேசு சபை மக்களுக்கு வருத்தமாகி விட்டது. பவுல் அவர்களுக்குப் பிரசங்கிக்கும்போது கிறிஸ்துவுக்குள் பக்திவிருத்தி உண்டாவதற்கும், தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வதற்கும் தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். ஆகவே தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய குழந்தைகளாயிராமல் வளர வேண்டும்.

 

“ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்” (கலாத்தியர் 4:7).

 

புத்திரன் என்றால் குழந்தை கிடையாது. வளர்ந்த பிள்ளையைக் குறிப்பதுதான் புத்திரன். வளர்ந்த பிறகு நமக்காக தேவன் பல சுதந்தரங்களை வைத்திருக்கிறார். அதை பற்றி பிடித்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு. பரிசுத்தம், ஐசுவரியம், ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் தகுதியற்றவர்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரித்து, அவர் நம்மை தகுதிப்படுத்தியிருக்கிறார். ஆகவே உனக்கு தகுதியில்லை என்று சொல்லுகிற பிசாசின் குற்றச்சாட்டுக்கு இடங்கொடுத்து ஆசீர்வாதங்களை இழந்துபோகக்கூடாது. நான் தகுதியுள்ளவன் என்பதை விசுவாசித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

 

“ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோசெயர் 1:12-14).

 

‘ஒளியிலுள்ள பரிசுத்தவான்கள்’ என்றால் ‘இரட்சிக்கப்பட்டவர்கள்’ என்று அர்த்தம். அதாவது இரட்சிக்கப்பட்டவர்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்வதற்கு தேவன் அவர்களை தகுதிப்படுத்தியிருக்கிறார். இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் சம்பாதித்துக் கொடுத்த ஆசீர்வாதங்களை எல்லாம் நாம் உரிமைப்பாராட்டி எடுத்துக்கொள்ளும்போது தான் அது நம்முடையதாகிறது. வேதத்தில் ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது. தாவீது என்பவன் ஆட்டு மேய்ப்பனாக இருந்து கர்த்தருடைய தயவால் ராஜாவாக உயருகிறான். தாவீதுக்கு முன்பு சவுல் என்பவன் ராஜாவாக இருந்தான். அக்காலத்து முறைமைப்படி ஒருவர் புதிதாக ராஜா வருவாரானால் பழைய ராஜாவினுடைய சொந்த பந்தங்கள் எல்லாரையுமே அழித்துவிடுவார்கள். ஆனால் தாவீது ராஜாவாக வந்தவுடன், “சவுலினுடைய குடும்பத்தில் தயவுபெறத்தக்கவன் யாரேனும் உண்டா?” என்று கேட்கிறான். அதற்கு அவனுடைய வேலைக்காரன், “மேவிபோசேத் என்னும் ஒருவன் இருக்கிறான்” என்றான். தாவீது ராஜா அவனை அழைத்து வரும்படி சொல்லுகிறார். மேவிபோசேத் பயந்து முகங்குப்புற தாவீதுக்கு முன்பாக விழுகிறான். தாவீது அவனைப் பார்த்து, “பயப்படாதே” என்று சொல்லுகிறார்.

“தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக்கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்” (2 சாமுவேல் 9:7).

 

மேவிபோசேத்துக்கு ஒரு ஆச்சரியமான உயர்வு வந்தது. ஆனால் அவன் அதை எதிர்பார்க்கவே இல்லை. தாவீது தன்னைக் கொன்றுவிடுவான் என்று பயந்துகொண்டு வாழ்ந்து வந்தான். ஆனால் தாவீதோ அவனுக்கு ராஜ மரியாதை கொடுத்து சவுலினுடைய நிலங்களை எல்லாம் திரும்பக் கொடுக்கிறான். இது எதினால் வந்தது? மேவிபோசேத்தின் தகப்பனான யோனத்தானும், தாவீதும் நண்பர்கள். அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளே உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அந்த உடன்படிக்கையின் நிமித்தமாக தகுதியில்லாத மேவிபோசேத்துக்கு தயவு காண்பிக்கப்படுகிறது, ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது. பரம தகப்பனாகிய பிதாவானவர் இயேசுவோடு கல்வாரி சிலுவையில் செய்த உடன்படிக்கையின் நிமித்தமாக தகுதியில்லாத நமக்கு ஆசீர்வாதங்கள் இறங்கிவருகிறது. இதற்கு மேவிபோசேத்தின் கதை ஒரு நிழலாட்டமாயிருக்கிறது. நாமும் மேவிபோசேத்தைப்போல மரணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால் இயேசுவோடு தேவன் பண்ணின உடன்படிக்கையின் நிமித்தமாக நம்மை சாப நிலையிலிருந்து தூக்கியெடுத்து, தகுதியில்லாத நம்மை இரட்சித்து ஆசீர்வதித்திருக்கிறார். இன்றைக்கு தேவன் நமக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங்கீதம் 23:5) என்று வேதம் சொல்லுகிறது. இந்த உலகத்தில் மனிதனால் உண்டாக்கப்பட்ட பந்தியே சுவையாக இருக்குமானால் தேவனால் உண்டாக்கப்பட்ட பந்தி எவ்வளவு நன்மையாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

 

“சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்” (ஏசாயா 25:6).

 

அதாவது சகல ஜனங்களுக்கும் தேவன் கல்வாரி சிலுவையின் மூலமாக கொழுமையான பந்தியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

 

“அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்” (மத்தேயு 22:4).

 

பழைய ஏற்பாட்டில் கொழுமையான ஆடு பலியாக கொடுக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இயேசுவே ஆட்டுக்குட்டியாக நமக்காக பலியானார். அதன் மூலம் பரிசுத்தம், ஐசுவரியம், சுகம், வெற்றி, சமாதானம் என எல்லாவித நன்மைகளும் ஆயத்தமாய் இருக்கிறது. தேவன் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துவிட்டு, “சாப்பிட வாருங்கள்” என்று நம்மை அழைக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தேவனோடு சேர்ந்து பந்தியை அனுசரிப்பதாகும். பழைய ஏற்பாட்டில் மேவிபோசேத் நித்தமும் ராஜ பந்தியை அனுசரித்ததைப்போல நாமும் இயேசு கிறிஸ்துவின் மூலம் சகல ஆசீர்வாதங்களும் நிறைந்த தேவனுடைய பந்தியை அனுசரிக்கிறோம். நாம் உரிமையோடு சுகம் என்னுடையது, ஆரோக்கியம் என்னுடையது, ஐசுவரியம் என்னுடையது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர், “எனக்கு பந்தியில் இடம் வேண்டாம், ஒரு ஓரத்தில் கிடைத்தால் போதும்” என்கிறார்கள். ஆனால் இது தாழ்மை கிடையாது, சுத்த அறிவீனம். தேவன் நமக்காகத்தான் ஆசீர்வாத பந்தியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். இதற்கு இயேசு நம்மை தகுதிப்படுத்தியிருக்கிறார். ஆகவே தேவனுக்கு நன்றி சொல்லி ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டும். இன்னும் சிலர் மிகவும் மிஞ்சின பரிசுத்தவான்களாக, பெருமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வேதத்தின்படி தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். ஆவிக்குரிய பெருமைக்கு நாம் ஒருநாளும் இடங்கொடுக்கக்கூடாது. அது நம்மிடம் உள்ள ஆசீர்வாதங்களைப் பறித்துவிடும்.

 

“அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு; ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்” (லூக்கா 15:25-32).

 

இங்கே இரண்டு குமாரர்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மூத்த குமாரன் பெருமையுள்ளவனாக காணப்படுகிறான். தூரத்தில் கீத வாக்கியங்களின் சத்தம் கேட்டு வேலைக்காரனிடம் விசாரிக்கிறான். அப்போது தன்னுடைய தம்பியாகிய இளைய குமாரன் கெட்டுப்போய் மனந்திரும்பி மறுபடியும் வந்துவிட்டான் என கேள்விப்பட்டு மிகவும் கோபமடைகிறான். ஏனெனில் மூத்த குமாரன் சுயநீதி உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் அவர்களுடைய தகப்பன் மிகவும் நல்லவராகவும், இரக்கமுள்ளவரகவும் இருக்கிறார். அவர் இளையகுமாரனை ஏற்றுக்கொள்கிறார். மேலும் மூத்த குமாரனையும் உள்ளே வரும்படி அழைக்கிறார். ஆனால் அவனோ உள்ளே செல்லாமல் தன்னுடைய சுயநீதியைப் பற்றிப் பேசுகிறான். கடைசியில் அவன் உள்ளேயே வராமல் காணாமல் போகிறான். அந்த தகப்பன் “என்னுடையதெல்லாம் உன்னுடையதாய் இருக்கிறது” என்று சொல்லுகிறார். ஆனால் மூத்த குமாரன் தான் எதையும் எடுத்துக்கொள்ளாமல் நான் எவ்வளவு நல்லவன் என்ற பெருமையைப் பற்றி மட்டுமே பேசுகிறான். ஆவிக்குரிய பெருமை உள்ளவர்களால் எந்த ஆசீர்வாதங்களையும் எடுத்துக்கொள்ள முடியாது. “மேன்மைபராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்” என்று வேதம் சொல்லுகிறது. அதுதான் உண்மையான தாழ்மை. “நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்” என்று யோவான்ஸ்நானகன் சொல்லுகிறார். தேவனுடைய நாமத்தை உயர்த்தி நம்மைத் தாழ்த்துகிறவர்களாய் இருக்க வேண்டும். இந்த கதையில் வரும் இளைய குமாரன் தகப்பனிடம் தாழ்மையோடு வருகிறான். “நான் பரத்திற்கும் உமக்கும் விரோதமாக பாவம் செய்தேன், என்னை வேலைக்காரனில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லுகிறான். தகப்பனோ மிகுந்த இரக்கமுள்ளவராய் அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு உயர்ந்த வஸ்திரம், மோதிரம், பாதரட்சை என எல்லாவற்றையும் தருகிறார். அதுமட்டுமல்லாமல் கொழுத்தக் கன்றை அடித்து பந்தியை ஆயத்தப்படுத்துகிறார். “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்று வேதம் சொல்லுகிறது. வேதத்தில் நூற்றுக்கு அதிபதி என்ற ஒருவனைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அவன் தாழ்மையுள்ளவனாக தன்னுடைய வேலைக்காரன் சுகமடைவதற்காக இயேசுவிடம் வருகிறான். அவன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் ஒருவனைப் பார்த்து வா என்றால் வருகிறான், போ என்றால் போகிறான். என்னுடைய வார்த்தைக்கே இவ்வளவு வல்லமை இருக்கும்போது சர்வ வல்லவராகிய நீர் ஒரு வார்த்தை சொல்லும். என்னுடைய வேலைக்காரன் சுகமடைவான். நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் பாத்திரன் அல்ல” என்று சொல்லுகிறான். அதற்கு இயேசு, “இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை” என்று சொன்னார். அவனுடைய வேலைக்காரன் அந்த நிமிடத்திலேயே சுகமடைந்தான். ஆகவே நாம் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்போது அவருடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது எளிதாகிறது.   

 

 

 

 

Book your tickets