செழிப்பு

“தமது ஊழியக்காரருடைய செழிப்பை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்,” சங் 35:27

தமிழ் வேதாகமத்தில் தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று வருகிறது. ஆங்கில வேதாகமத்தில் செழிப்பு (Prosperity) என்ற பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. நம்முடைய தேவனுடைய விருப்பங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று எத்தனையோ பேருக்கு நம்முடைய செழிப்பு இஷ்டம் இல்லை. ஆனால் தேவன் எல்லாரிலும் பெரியவர், அவருடைய விருப்பங்கள் நம்மை பற்றி நல்ல விருப்பங்களாகவே இருக்கிறது. தேவன் நல்லவர், ஆகவே அவருடைய விருப்பங்கள் நல்லவைகளாகவே இருக்கிறது.

“நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல நன்மைக்கு ஏதுவான நினைவுகளே.” (எரே 29:11)

தேவன் நம் பேரில் நல்ல நினைவுகளை மாத்திரம் வைத்திருக்கிறார். ஆகவே இந்த நல்ல தேவனை உள்ளத்தில் ஏற்று கொள்ளாதவர்கள் இவரை உள்ளத்தில் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்வதினால் நமக்கு நன்மைகள் தொடர ஆரம்பிக்கிறது. தீமைகள் மறைய ஆரம்பிக்கிறது. புதிய ஏற்பாட்டிலும்

“பிரியமானவனே நீ எல்லாவற்றிலும் செழித்து சுகமாயிருக்க நான் விரும்புகிறேன்” (III யோ 2)

நம் தேவனுடைய நல்ல விருப்பங்களை பாருங்கள். நாம் அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. செழிப்பும் சுகமும் அவருடைய திட்டங்களாக இருக்கிறது. தரித்திரமும், வியாதிகளும் அவருடைய மனதில் இல்லை. நம்முடைய தரித்திரத்தையும், நம்முடைய வியாதிகளையும் அவர் சிலுவையில் தம்மேல் ஏற்றுக்கொண்டார். இன்று அவருடைய சிலுவை பாடுகள் மூலம் செழிப்பும், சுகமும் நமக்கு பண்டமாற்று செய்யப்பட்டுள்ளது. மனிதன் செழிப்புக்கென்றே தேவனால் படைக்கப்பட்டவன். முதல் மனிதனாகிய ஆதாமின் வாழ்வை பார்க்கும்போது இது நமக்கு நன்றாக விளங்குகிறது. இரண்டு பேருக்கு நாலு பெரிய ஆறுகளை தேவன் ஒட விட்டார். இது தேவையா என்று அவர் எண்ணவில்லை. தேவைக்கும் அதிகமான செழிப்பே அவருடைய எண்ணமாக இருந்தது. ஆதாமுடைய ஏதேன் தோட்டத்தில் பொன் இருந்தது என்று வேதம் கூறவில்லை. பொன் விளைந்தது என்று வேதம் கூறுகிறது. நாளுக்கு நாள் பொன் பெருகிற்று. இரண்டு பேருக்கு இது தேவையா என்று தேவன் கேட்கவில்லை. இது தேவையா, அது தேவையா என்ற கேள்விகளெல்லாம் மனிதன் விழுந்து போன பின்பு எழுந்த கேள்விகள். தேவைக்கு மிஞ்சிதான் தேவன் அவர்களை நடத்தினார். முத்துக்களும், கோமேதக கற்களும் ஏதேனில் இருந்தது. பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் தேவன் படைத்தார். ஏராளமான கனிகள், இருந்ததோ இரண்டே பேர். சாப்பிட்டார்கள், மிச்சம் எடுத்தார்கள். இதுதான் அவர்களுடைய வாழ்க்கை முறை. ஆனால் என்றைக்கு மனிதன் தேவனுடைய வார்த்தைகளை தூர தள்ளி, பிசாசின் வார்த்தைக்கு செவி கொடுத்தானோ அன்றைக்கே செழிப்பு மனிதனுடைய வாழ்க்கையை விட்டு ஓடி மறைந்தது. வறட்சியும், தரித்திரமும் அவன் பங்காக மாறிவிட்டது. இந்த வறட்சியிலிருந்து மனிதனை தூக்கி எடுத்து செழிப்பை அவனுக்குத் திரும்ப தரும்படிக்கே இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். இன்று இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட தேவனுடைய மக்களுக்கு தரித்திரம் இல்லை. இந்த சத்தியத்தை புரிந்துகொண்டு செழிப்பை ஏதிர்பார்க்கும் போது தேவ ஆவியானவர் செழிப்பை நம் வாழ்வில் கொண்டு வருகிறார். வேதம் இவ்விதமாக சொல்லுகிறது.

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் அவருக்கு பாதையை செவ்வை பண்ணுங்கள்” (லூக் 3:3)

செழிப்பின் கீழ் தேவனுடைய பணப் பண்டமாற்று முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தேவன் பாவிகளுடைய ஆஸ்தியை அவருடைய மக்களுக்கு அற்புதமாக பண்டமாற்று செய்கிறார் என்பதை வேதம் பல இடங்களில் வலியுறுத்துகிறது. ஞானியாகிய சாலமோன் இப்படி சொன்னான்.

“நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சுதந்திரம் வைத்து போகிறான். பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்து வைக்கப்படும்.” (நீதி 13:22)

பிரசங்கியின் புஸ்தகம் இவ்விதமாக சொல்லுகிறது.

“தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும், இன்பத்தையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவன் வசமாக வைத்துவிட்டு போகும் பொருட்டு சேர்த்து குவித்து வைக்கும் தொல்லையை நியமித்திருக்கிறார்.” (பிர 2:26)

பஞ்சம் பிழைக்கும்படி ஏகிப்துக்கு போன ஆபிராம் சீமானாக எகிப்தை விட்டு புறப்பட்டான் என்று கண்டோம். அவனுடைய மனைவி சாராள் நிமித்தம் எகிப்தின் இராஜாவகிய பார்வோன் கழுதைகளையும், ஆடுமாடுகளையும் ஏராளமாக ஆபிராமுக்கு கொடுத்தான். சாராளை தொட தேவன் பார்வோனுக்கு அனுமதி தரவில்லை. பார்வோன் சாராளை திரும்பி அனுப்பினான்.  தான் கொடுத்த பொருட்களை நியாயப்படி திரும்பி வாங்கி இருக்க வேண்டும், அவன் திரும்பி வாங்கவில்லை. தேவன் அவைகளை திரும்ப வாங்க விடவில்லை. ஏனென்றால் ஆபிராமைஇவிதமாக ஐசுவரியவான் ஆக்குவது தேவனுடைய திட்டமாக இருந்தது. அடுத்த அதிகாரத்தில் இப்படி வாசிக்கிறோம்.

“ஆபிராம் மிருகஜீவன்களும், வெள்ளியும், பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாக இருந்தான்” (ஆதி 13:2)

அது மாத்திரமல்ல யாக்கோபின் குடும்பத்தார் பஞ்சம் பிழைக்கும்படி எகிப்துக்கு போனார்கள். அவர்களை எகிப்தியர் அடிமைகளாக்கி கொடுமையாய் நடத்தினார்கள். தேவன் பாத்து வாதைகளை எகிப்தியரின் மேல் அனுப்பினார். தலைபிள்ளை சங்காரம் என்ற பத்தாவது வாதையின் போது எகிப்தியர் இஸ்ரவேலரை துரத்தி விட்டார்கள், அந்த நாள் இரவில் எகிப்தியருடைய பொன்னையும், வெள்ளியையும் இஸ்ரவேலர் கேட்கும்படி தேவன் இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார். இவர்கள் கேட்டதை எகிப்தியர் கொடுத்தார்கள். ஒரே இரவில் இஸ்ரவேலர் முப்பது இலட்சம் பேர் செழிப்பாக மாறி விட்டார்கள். இதுவரை பொன்னை தொட்டு கூட பார்க்காத இஸ்ரவேலர் பொன்னை மூடை மூடையாக சுமந்து கொண்டு எகிப்தை விட்டு வெளியேறினார்கள். Living Bible இப்படி சொல்லுகிறது,

“அப்பொழுது வெள்ளி பொன் ஆகிய சுமைகளோடு அவர்களை எகிப்திலிருந்து புறப்பட பண்ணினார்” (சங் 105:37)

பாவிகளாகிய எகிப்தியருடைய செல்வத்தை இஸ்ரவேலருக்கு பண்டமாற்றுச் செய்த அருமையான காட்சியை இங்கே பார்க்கிறோம். தேவன் மாறாதவர், இன்றும் அவர் இவ்விதமான பண்டமாற்று வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் எதிர்பாருங்கள் . எகிப்தியர் ஆண்டுகளாக குவித்து வைத்த பொன்னை தேவன் பிடுங்கி இஸ்ரவேலர் கையில் கொடுத்துவிட்டார். தேவனாலே எல்லாம் கூடும். இது அவருக்கு லேசான காரியம். இஸ்ரவேலர் எகிப்தியருடைய பொன்னை இச்சிக்கவில்லை, அதை திருடுவதற்கு திட்டம் போடவில்லை. தேவன் அதை தம்முடைய மக்களுக்கு கடத்தி விட்ட காட்சியை இங்கே காண்கிறோம். உங்களுக்காக எந்த பாவி சேர்த்து குவித்து வைத்துக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது தேவனுக்கு தெரியும். எத்தனை சிலாக்கியம்? வேர்வை சிந்தி பாவிகள் சேர்த்து வைக்க, அதை நாம் வேர்வை இல்லாமல் அனுபவிப்பது அவருடைய திட்டம். அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவர் சிருஷ்டிகர், அவருடைய திட்டப்படி அவர் செய்வார், அவருக்கு உரிமை இருக்கிறது. அவருடைய திட்டத்தில் நாம் இணைந்து செயல்பட நம்மை அர்பணிக்க வேண்டும். இது பேராசை அல்ல. தேவன் தரும் செல்வத்தை நாம் வாங்குவதில் எந்த தவறும் இல்லை. மனிதன் இப்படி வாழும்படி தேவன் எதிர்பாக்கிறார். மனிதன் மாடாக உழைத்து ஓடாக தேய்ந்து, வேர்வை சிந்தி பணக்காரனாவது தேவனுடைய திட்டமல்ல.

“கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். கர்த்தர் அதனோடே வேர்வையை கூட்டார்.” (நீதி 10:22)

வேர்வை சாபத்தின் அடையாளம். ஆதாம் தேவனுடைய வார்த்தையை மீறினான். அதின் விளைவாக சாபம் அவனுக்கு வந்தது. சாபத்தின் அடையாளமே வேர்வை என்று நாம் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். நாம் தேவனுடைய வல்லமையினால் ஆசீர்வதிக்கப்படுவது தேவனுடைய மாறாத திட்டம். முடிவில் மகிமை தேவனுக்கு போய் சேருகிறது. தேவனையன்றி யாரும் இதை செய்திருக்க முடியாது என்று மக்கள் உணருகிறார்கள். மோசேயினுடைய வாழ்க்கையில் தேவனுடைய அற்புத பண்டமாற்றை நாம் கண்டோம். இஸ்ரவேலின் ஆண்பிள்ளைகள் எல்லாரும் நீல நதிக்கு உள்ளே ஏறியப்பட்டார்கள். ஆனால் மோசே என்ற பெயருக்கு ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டவன் என்று பொருள். எடுத்தது பார்வோனின் குமாரத்தி. எந்த பார்வோன் இஸ்ரவேலின் ஆண் பிள்ளைகளை ஜலத்துக்குள் வீசிவிட கட்டளையிட்டானோ அவன் குமாரத்தியே மோசேயை எடுத்து, தன வளர்ப்பு பிள்ளையாக வைத்து கொண்டாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இது கர்த்தராலே ஆயிற்று ஆச்சரியமாக இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. பார்வோனின் குமாரத்தி மோசேயை வளர்க்க மோசேயின் தாயையே நியமித்தாள். பார்வோனின் அரண்மனையிலிருந்து உயர் ரகமான தின்பண்டங்களும், உயர் ரகமான ஆடைகளும், உயர் ரகமான வாசனை திரவியங்களும், உயர் ரகமான விளையாட்டு பொருட்களும் மோசேயின் தாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேவரீர் செய்ய நினைத்தது தடைபடாது என்று யோபு சொன்னது எத்தனை உண்மை? மோசே வாலிபனான போது அரண்மனையிலேயே வளர்ந்தான். அரண்மனை பொக்கிஷ சாலையிலிருந்து அவனுடைய கல்விக்காக ஏராளம் செலவழிக்கப்பட்டது.

“மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு வாக்கிலும் செயலிலும் வல்லவனாக இருந்தான்” (அப் 7:22)

இதுவும் தேவனுடைய அற்புதமான பண பண்டமாற்றை காண்பிக்கிறது. அநேகர் மோசே பேச முடியாத திக்கு வாயன். ஒரு ஆட்டு மேய்ப்பன் என்று எண்ணுகிறார்கள், இல்லை, அவன் வாக்கிலும் செயலிலும் வல்லவனாக இருந்தான் என்று இந்த வசனம் கூறுகிறது. அத்தனைக்கும் பணத்தை பார்வோனிடமிருந்து தேவன் வாங்கி கொடுத்தார். அது மாத்திரமல்ல, இஸ்ரவேலர் கானான் தேசத்தில் குடியேறின விதம் ஒரு அற்புதம். கர்த்தர் இவ்விதமாக சொன்னார்.

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னை பிரவேசிக்க பண்ணும் போது நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்ச தோட்டங்களையும், நீ நடாத ஒலிவ தோப்புகளையும் தேவன் உனக்கு கொடுப்பதினால் நீ சாப்பிட்டு திருப்தி அடைவாய்” (உபா 6:10)

தேவனுடைய ஆச்சரியமான பண்டமாற்று வேலையை பாருங்கள். கானானியர் வேர்வை சிந்தி, கஷ்டப்பட்டு வசதியான பெரிய பட்டணங்களை கட்டினார்கள். அவர்கள் கட்டும் போது பெரியதாக கட்டும்படி தேவன் ஆலோசனை கொடுத்தார். வசதியாக கட்டும்படி தேவன் ஆலோசனை கொடுத்தார். அவர்கள் அப்படியே கட்டினார்கள். ஆனால் கானானியருக்காக அவர் இந்த ஆலோசனைகளை தரவில்லை. இஸ்ரவேலருக்காக இந்த ஆலோசனைகளை தந்தார். கானானியர் கட்டி முடித்தார்கள். தேவன் அதை இஸ்ரவேலருக்கு பண்டமாற்று செய்து விட்டார். கானானியர் வீடு கட்டினார்கள். தேவன் சகல வித நல்ல வஸ்துக்களுக்களாலும் நிரப்பும் படி ஆலோசனை கொடுத்தார். அவர்களுக்கு உதவிகளையும் அனுப்பி தந்தார். அத்தனையும் இஸ்ரவேலரை மனதில் வைத்தே தேவன் செயல்பட்டார். கானானியர் கஷ்டப்பட்டு நல்ல பொருட்களை சேகரித்து வைத்தார்கள். இஸ்ரவேலர் கஷ்டமில்லாமல் தேவனை துதித்துக் கொண்டே அனுபவித்தார்கள். கானானியர் துரவுகளை வெட்டினார்கள். ஆழம் போதாது, இன்னும் ஆழமாய் தோண்டு என்று தேவன் சொன்னார். அவர்கள் அப்படியே தோண்டினார்கள். இஸ்ரவேலர் கர்த்தரை துதித்துக்கொண்டே அந்த தண்ணீரை அனுபவித்தார்கள். எத்தனை ஆச்சரியமான காரியம்? திராட்சை தோட்டங்களை கானானியர் நாட்டும் போது தேவன் உயர்தரமான கன்றுகளை நட்டும்படி கானானியருக்கு சொன்னார். அவர்கள் தேடித் திரிந்து கன்றுகளை நட்டு தோட்டங்களை உண்டாக்கினார்கள். இஸ்ரவேலர் தோத்திரம் சொல்லிக்கொண்டு அதின் கனிகளை புசித்தார்கள், அது போலவே உயர்தரமான ஒலிவ தோப்புகளை கானானியர் கஷ்டப்பட்டு உண்டாக்கினார்கள். இஸ்ரவேலர் ஒலிவ எண்ணையை அனுபவித்தார்கள். வேர்வை இல்லாத ஐசுவரியத்தை தேவன் இஸ்ரவேலருக்கு தந்தார். அதை அனுபவிக்கும் போது தேவனுக்கு மகிமையை செலுத்த வேண்டும் என்ற ஒரே நிபந்தனையை மாத்திரம் விதித்தார்.

“நீ சாப்பிட்டு திருப்தியாகும் போது கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (உபா 6:12)

ஆம்! நண்பர்களே! சாப்பிடுவதும், திருப்தி அடைவதும் தேவனை துதிப்பதும் தேவன் அவருடைய மக்களுக்கு வைத்திருக்கிற பங்கு. உங்களுக்கும் வேர்வை இல்லாத ஐசுவரியத்தை தேவன் ஆயத்தமாக்கி கொண்டிருக்கிறார். நான் கர்த்தர் நான் மாறாதவர் என்று வேதம் கூறுகிறது. எதிர்பாருங்கள், உங்கள் வாழ்வில் அது பலிக்கும். ஆமென்.

Comments(4)

  1. udhya chandran says

    excellent words

  2. SATHISH.S says

    Hell Sir, This is very good message to everyone. Because, we are not able to understand our god mind. Because, he is creator. He have it lots of knowledge and wisdom. But who are all accept the god (jesus) that person to get the special intention. That intention to give faith and believeness and money also. jesus is a money maker. he is a very good friend. he is a very good father. He is a very good adviser. Whatever we need directly to ask to our lovable god. He always waiting to hear our prayer request. Our god plan always very high. In my way we need to believe our god (Jesus) without doubt. Lovable god always inside our heart. so we are also always rich person. Thank u pastor for wonderful posting.

  3. Mrs.jeyarani Julius says

    yes, this is very good message to me Thank you Pastor

  4. bala chandran says

    thank u for the wonderful words pastor

Post a comment

Book your tickets