“தமது ஊழியக்காரருடைய செழிப்பை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்,” சங் 35:27
தமிழ் வேதாகமத்தில் தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று வருகிறது. ஆங்கில வேதாகமங்களில் செழிப்பு என்ற பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இரண்டுமே சரிதான். தேவன் தம்முடைய ஊழியக்காரனுடைய சுகத்தையும், செழிப்பையும் விரும்புகிற தேவன். ஊழியக்காரன் என்றவுடன் வேலையை விட்டுவிட்டு முழுநேர ஊழியம் செய்கிரவர்களைத்தான் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், பழைய ஏற்பாட்டில், தேவனுடைய தாசர்கள் எல்லாரும் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். ஆகவே, இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் இந்த வசனம் பொருந்தும். நண்பர்களே, நீங்கள் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொன்டவர்களா? அப்படியானால், நீங்கள் செழிப்பாக இருக்க உங்கள் தேவன் விரும்புகிறார். உங்கள் சபை போதகர் அதை விரும்பாமல் இருக்கலாம், உங்கள் உடன் விசுவாசிகள் அதை விரும்பாமல் இருக்கலாம். அதினால் எண்ண? நம்மை படைத்த தேவனுடைய விருப்பம் எண்ண என்பதுதான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. அவர் விரும்பினால் மட்டும் போதாது. அவருடைய விருப்பத்தை நீங்கள் புரிந்துகொண்டு, அவருடைய விருப்பத்தை உங்கள் விருப்பமாக மாற்ற வேண்டும். அவ்விதமாக மாற்றும் போது தேவனுடைய விருப்பம் உங்கள் வாழ்வில் நிறைவேறும். அவங்க அவங்க தலைவிதிப்படி அவங்க அவங்களுக்கு நடக்கும் என்றார் ஒரு போதகர். தச;ஐவிதியை மாற்றவே நம் தேவன் உயிரோடு இருக்கிறார், அவருடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுள்ளதாக இருக்கிறது.
“தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுள்ளதாயும் இருக்கிறது” எபி 4:12.
அவருடைய வார்த்தை நம் தலைவிதியை மாற்ற வல்லமை உள்ளதாக இருக்கிறது. யாருக்கு? தேவனுடைய வார்த்தைகளை கண்டு பிடிக்கிரவர்களுக்கு. ஆகா! என் தேவன் என்னைப்பற்றி இவ்வளவு நல்ல விருப்பத்தை உடையவராக இருக்கிறாரா? அப்படியானால் நான் தரித்திரனாக இருக்க அவசியம் இல்லை. என் முன்னோர்கள் தரித்திரராக இருந்தார்கள். அவர்கள் இந்த ஆண்டவரை அறிந்து கொள்ளவில்லை. அவருடைய விருப்பத்தை புரிந்துகொள்ளவில்லை. நான் தரித்திரனாக இருக்கப் போவதில்லை. என் பிள்ளைகள் தரித்திரராக இருக்கப் போவதில்லை என்ற தீர்மானத்துக்கு வாருங்கள் நண்பர்களே! உங்கள் தலைவிதி மாறுவதற்கு இந்த தீர்மானம் அவசியம், ஏனென்றால் நம் தேவன் எதையும், யார் மேலும் திணிக்க மாட்டார். அவர் மிக மிக மென்மையானவர். நாமாக விரும்பி கேட்க்கும் போது மாத்திரமே தேவனுடைய செழிப்புகளும், ஆசீர்வாதங்களும் நம் வாழ்வில் பலிக்கும். உதாரணமாக ஒருவரும் கெட்டுப் போவது தேவனுக்கு விருப்பம் இல்லை.
துன்மார்க்கர்கள் தன துன்மார்க்கத்திலே சாகிறது எனக்கு எவ்வளேவேனும் பிரியமோ, அவன் மனந்திரும்பி பிழைப்பதை அல்லவோ நான் விரும்புகிறேன் என்று ஆண்டவர் உரைத்தார். (எசே 18:23)
ஒருவனும் நரகத்துக்கு போவது ஆண்டவருக்கு விருப்பம் இல்லை. இதுவரை ஒருவனையும் தேவன் நரகத்துக்கு அனுப்பினதும் இல்லை. ஆனால், தேவனுடைய விருப்பம் Automatic காக நம் வாழ்வில் நடப்பதில்லை. மனிதன் இயேசுவை ஆண்டவராக உள்ளத்தில் விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது மாத்திரமே இது பலிக்கும். ஆண்டவர் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் வாசற்படியிலும் நின்று தட்டிக் கொண்டே இருக்கிறார். “இதோ வாசர்ப்படியில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன், ஒருவன் என் சத்தத்தை கேட்டு கதவை திறந்தால் நான் உள்ளே பிரவேசிப்பேன் என்று ஆண்டவர் உரைக்கிறார்.” (வெளி 3:20) உடைத்துக்கொண்டு, ஒரு நிமிடத்தில் உள்ளே அவர் வந்துவிடலாம். அவர் ஒருபோதும் அப்படி செய்வதில்லை. அவர் மனிதனுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார். மனிதனுடைய விருப்பமின்றி, அவர் எதையும் கட்டாயப்படுத்தி செய்வதில்லை. ஆகவே அவர் காத்துக்கொண்டு வெளியே நிற்கிறார். கதவின் கொண்டி மனிதன் கையிலேயே இருக்கிறது. திறந்தால் உள்ளே வந்து அவனை ஆசீர்வதிக்கிறார். அதுபோலவே செழிப்பு அவருடைய ஆசையாக இருந்தாலும், அது தானாக நம் மேல் பழுத்து விழாது. நாம் தேவனுடைய ஆசையை வேத புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டு நாம் அதை ஆசைப்படும்போது அது நம் வாழ்வில் பலிக்கும். தரித்திரம் என்ற தலையெழுத்துக்கு கீழ் நாம் வாழ்நாளெல்லாம் தவிக்க தேவன் விரும்பவில்லை. ஆகவே நண்பர்களே! ஆண்டவர் பார்த்து சிலரை உயர்த்துகிறார், சிலரை தாழ்த்துகிறார். என்னவோ, அவருடைய சித்தம் நமக்கு புரியாது என்று அநேகர் பேசிக்கொண்டு இருந்த இடத்திலயே இருப்பது போல நீங்கள் இராதேயுங்கள். தெய்வீக செழிப்பில், தேவனுடைய பங்கு (Godward part) இருக்கிறது. மனிதனுடைய பங்கு (Manward part) ஒன்று இருக்கிறது. மனிதனுடைய பங்கை அவன் நிறைவேற்றும் போது மாத்திரமே, தேவனுடைய விருப்பங்கள் அவன் வாழ்வில் நிறைவேறுகிறது. நூற்றுக்கு நூறு தேவன் தான் பொறுப்பு என்று எண்ணுவது முற்றிலும் தவறு. நீங்கள் செழித்திருக்க தேவன் நூற்றுக்கு நூறு விரும்புகிறார். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? விரும்புவீர்களானால் ஆம்! ஆண்டவரே நீர் என் செழிப்பை விரும்புகிற தேவன் என்று வாயினாலே சத்தமாக பேச ஆரம்பியுங்கள். எல்லா ஆசீர்வாதங்களும் வாயில் தான் ஆரம்பிக்கிறது. உம்முடைய வார்த்தையை நான் நம்புகிறேன், அப்படியே எனக்கு ஆகக்கடவது ஆமென் என்று திரும்ப திரும்ப சொல்லுங்கள். ஆண்டவரே உம்முடைய வார்த்தையின்படி எனக்கு செய்கிறீர், நன்றி என்று ஜெபியுங்கள். சூழ்நிலையை பாராதிருங்கள். மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை கேளாதிருங்கள். ஏனென்றால், நீங்கள் ஏழையாக இருப்பதையே மக்களில் அநேகர் விரும்புகிறார்கள். நம்முடைய தேவன் ஒரு மனிதன் அல்ல. விஷேசமாக உங்களுடைய இனஜனத்தார் நீங்கள் செழித்திருப்பதை விரும்பவில்லை. தேவன் உங்கள் இனஜனத்தை விட மேலானவர்., நல்ல எண்ணங்களைக் கொண்டவர். அவருடைய வார்த்தையைப் பற்றி கொள்ளுங்கள். தேவனுடைய விருப்பத்துக்காக அடிக்கடி நன்றி சொல்லுங்கள். சங்கீதக்காரன் அப்படிதான் சொல்கிறான். “தம்முடைய ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்”. (சங் 35:27). எங்கள் சபை விசுவாசி ஒருவர் சென்னையிலிருந்து புறப்பட பேருந்தில் ஏறி அமர்ந்தார். அருகில் ஒரு ஊழியக்காரர் வந்து அமர்ந்தார். வழியில் பேசிக்கொண்டே வரும் போது அந்த ஊழியக்காரர் சொன்னாராம், தம்பி! இப்ப எல்லாம் செழிப்பு என்ற உபதேசம் சபைக்குள்ளேயும் முளைத்து விட்டது. ஆனால் நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், நம்முடைய ஆண்டவர் இயேசு பணத்தையே தொடாதவர். பணத்தைத் தொடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் அவர் பணப்பையை சுமப்பதற்கு ஒரு ஆளை அமர்த்தியிருந்தார் என்றாராம். எங்கள் சபை விசுவாசி, அவரைப் பார்த்து கேட்டாராம், ஆள் போட்டு பணப்பையை சுமக்க வைத்த பெரிய பணக்காரன்தான் நம் இயேசு என்பதை நீங்கள் ஏன் பார்க்கவில்லை என்றாராம். நண்பர்களே! நம் இயேசு ஒரு ஏழை அல்ல. அவர் சிலுவையில் நமக்காக ஏழை ஆனார். ஏன்? நம்முடைய ஏழ்மைத்தனத்தை அவர் தம்மீது போட்டுக்கொண்டார். நம்முடைய பாவங்களை சுமந்தது மாத்திரமல்ல, நம்முடைய தரித்திரத்தையும் அவர் சிலுவையில் சுமந்தார். என்னுடைய தரித்திரம் அவரை நிர்வாணமாக சிலுவையில் தொங்க விட்டு விட்டது. என்னுடைய தரித்திரம் இயேசுவை சிலுவையில் தரித்திரமாக தொங்க விட்டு விட்டது. என்னுடைய தரித்திரம் இயேசுவை பசியாக சிலுவையில் தொங்க விட்டு விட்டது. என்னுடைய தரித்திரம் இயேசுவை முள்முடி தரித்தவராக சிலுவையில் தொங்கவிட்டு விட்டது. எருசலேம் காடுகளில் வளரும் முள் செடிகளில் ஒன்றறை அங்குலம் நீளமான முட்கள் விளைகிறதாம். அவை இரும்பு ஆணிகளை போல வலுவாக இருக்கும் என்று டெரக் பிரின்ஸ் என்ற ஊழியர் கூறுகிறார். அவர் எருசலேம் பட்டணத்திலிருந்து பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர். அப்படிப்பட்ட முள்ளுகலாலே ஒரு கிரீடத்தை பின்னி இயேசுவின் தலையில் வைத்து போர் சேவகர்கள் லத்தியினால் ஓங்கி அடித்தார்கள். முள்கள் இயேசுவின் மூளையை நொறுக்கினது. இந்த முள்ளுகள் தரித்திரத்தின் அடையாளமாக இருக்கிறது. ஆதாம் பாவம் செய்த போது பொன்னை விளைவித்த பூமி முள்ளை விளைவிக்க ஆரம்பித்தது. செழிப்பு போய் வறுமை பூமியை மூடிக் கொண்டது. வறுமையின் அடையாளமாகிய முள்ளை இயேசு தம் தலையில் சுமந்து நம்மை வருமமையிலிருந்து மீட்டடெடுத்திருக்கிறார். நாம் இன்று ஆதாமின் வறுமைக்கு கீழ் இல்லை. நாம் இயேசுவின் செழிப்புக்கு கீழே இருக்கிறோம். ஊரிலே யாவரும் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கலாம், இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட நாம், வறுமை கோட்டுக்கு கீழே இல்லை. நாம் மேலே இருக்கிறோம். நீ கீழாகாமல் மேலாவாய் என்று தேவன் சொல்லியிருக்கிறார். செழிப்பு மாத்திரமே நம் குடும்பத்தின் பங்கு. ஏனென்றால் நாம் இயேசுவை சந்தித்து விட்டோம். ஆகவே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பிள்ளைகளுக்கு தேவன் எழுதும் போது இப்படி சொல்லுகிறார், “பிரியமானவனே! நீ எல்லாவற்றிலும் செழித்து சுகமாயிருக்க நாம் விரும்புகிறேன்”.(3 யோ: 2) தேவனுடைய நல்ல விருப்பங்களுக்காக நான் அவரை துதிக்கிறேன். பொல்லாத மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில் தேவன் இன்றும் நல்லவராகவே இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக நீ செழித்து சுகமாயிருக்க விரும்புகிறேன் என்று நாம் வாசிக்கிறோம். எத்தனையோ மனிதருடைய பொறாமையின் மத்தியில் தேவனுடைய வார்த்தை நம்மை ஊக்குவிப்பதாக இருக்கிறது. தேவன் பொல்லாதவர்களின் ஆஸ்தியை அவருடைய பிள்ளைகளுக்கு பண்டமாற்று செய்கிறார் என்பது வேதம் போதிக்கிற சத்தியம். சரித்திரத்தில் தேவன் திரும்ப திரும்ப இந்த பண்டமாற்றை நடப்பித்ததை நாம் பார்க்கும் போது நம்முடைய வாழ்விலும் தேவன் இப்படி செய்வார் என்ற நம்பிக்கை நமக்கு பிறக்கிறது.
“ பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்து வைக்கப்படும்.” (நீதி 13:22)
“தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு இன்பத்தை அளிக்கிறார். பாவம் செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவன் வசமாய் வைத்து விட்டு போகும் பொருட்டு சேர்த்து குவித்து வைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்.” (பிர 2:26)
பார்வோனுடைய செல்வத்தை தேவன் ஆபிரகாமுக்கு பண்டமாற்று செய்தார். பார்வோனுடைய குமாரத்தியின் செல்வத்தை தேவன் மோசேக்கு பண்டமாற்று செய்தார். எகிப்தியருடைய செல்வத்தை தேவன் இஸ்ரவேலருக்கு பண்டமாற்று செய்தார். அது மாத்திரமல்ல, கானானியருடைய செல்வத்தை தேவன் இஸ்ரவேலருக்கு பண்டமாற்று செய்தார். இவைகள் எல்லாவற்றையும் கடந்த பதிப்புகளில் கண்டோம். இந்த பதிப்பில் இன்னொரு சம்பவத்தை காண்பிக்க விரும்புகிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை விட்டு தூரம் போய்விட்டார்கள். தேவன் அவருடைய தீர்க்கதரிசிகளை கொண்டு அவர்களை எச்சரித்தார். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை.
“அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்காக இரக்கமுள்ளவராக இருந்தபடியால் அவர்களிடத்திற்கு தம்முடைய ஸ்தானாதிபதிகளை ஏற்கனவே அனுப்பினார். ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாதிபதிகளை பரியாசம் பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டை செய்து அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால் சகாயம் இல்லாமல் போயிற்று.” (2 நாளா 36:15)
ஆகவே இஸ்ரவேல் ஜனங்கள் எழுபது ஆண்டுகள் பாபிலோனியருடைய அடிமைகளாக நாடு கடத்தப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
“கர்த்தர் ஏரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் பாழாய் கிடந்த நாளெல்லாம் எழுபது வருஷம்” (2 நாளா 36:21)
ஆனால் அவர்களுடைய தண்டனை காலம் நிறைவேறி முடிந்தபோது தேவன் ஒரு அற்புதமான பண்டமாற்றத்தை உண்டாக்கினார். அந்த நாட்களில் பாபிலோனை ஆண்டு கொண்டிருந்த மகா ராஜாவாகிய கோரேஸின் ஆவியை அவர் பிடித்தார். எருசலேம் தேவாலயத்தை கட்டும் ஒரு ஆர்வத்தை அவனுக்குள் உண்டாக்கினார், எந்த ராஜா அவர்களை அடிமைகளாக ஆண்டு அடக்கிக் கொண்டிருந்தானோ அவனையே ஆட்கொண்டார். அவன் இப்படி ஒரு கட்டளையை பிறப்பித்தான்.
“பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்கு தந்தருளி எருசலேமிலே தமக்கு ஆலயத்தை கட்டும்படி எனக்கு கட்டளையிட்டார். எருசலேமிலே வாசம் பண்ணுகிற தேவனே தேவன்”. (எஸ்றா 1:2,3)
கோரேஸ் ராஜா நேபுகாத் நேச்சார் எழுபது ஆண்டுகளுக்கு முன் எருசலேமிலிருந்து கொண்டு வந்த தேவாலயத்து பணிமுட்டுகள் எல்லாவற்றையும் எடுத்து கொடுத்தான். இவ்விதமாக எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. ஆலயத்திற்கு பண்டமாற்றை தேவன் பாபிலோனிலிருந்து கொண்டு வந்தார். எருசலேம் தேவாலயத்தை கட்டுவதற்காக தேவன் கோரேஸ் ராஜாவுக்கு அற்புதமான வழிகளை திறந்து அவனை ஆசீர்வதித்தார். அதை குறித்து இப்படி வாசிக்கிறோம்.
“கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன் கதவுகள் பூட்டப்படாதிருக்கவும் அவன் வலது கையை பிடித்துக் கொண்டு நான் சொல்லுகிறதாவது. வெண்கல கதவுகளை உடைத்து இரும்பு தாழ்ப்பாள்களை முறித்து அந்தரங்கத்திலே இருக்கிற பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் நான் உனக்கு கொடுப்பேன்.” (ஏசா 45:4)
தேவன் கோரேசுக்கு யாருடைய கண்களிலும் படாமல் இருட்டில் மறைந்திருந்த பொக்கிஷங்களை எடுத்து கொடுத்தார். புதைந்திருந்த பொக்கிஷங்களை வெளியே கொண்டு வந்து கொடுத்தார். கோரேஸ் தேவாலயத்திற்க்காக அதை செலவழித்தான். யாரும் எதிர் பார்க்காத நபர் தான் கோரேஸ் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் அவன் மூலம் பணத்தை எருசலேமுக்கு கொண்டு வந்தார். உங்கள் வாழ்க்கையிலும் எதிர் பாராத வழிகளில் தேவன் பணப் பண்டமாற்றை செய்வார். அவராலே எல்லாம் கூடும் நம்புங்கள். ஆமென்.
Comments(6)
Sathish says
05/11/2015 at 1:09 pmThank u pastor to give the wonderful message to us.
balachandran says
11/11/2015 at 9:12 pmbest benifitfull words
bala chandran says
15/11/2015 at 6:44 pmword that are precious than all things
Miller Alixes says
23/12/2015 at 6:23 amWonderful revelation pastor. Thank u.
rathi says
10/01/2016 at 4:46 pmPraise the Lord,
SELVADURAI p.m says
05/08/2016 at 1:04 pmword of god that very precious than all things.Pastor kindly update the blog. we are living in tuticorin your precious messages hear only on tamilan t.v on every sunday ( 20 min.) only. hence your recent blog have increase faith in my heart.