"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும், என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக" (வெளிப்படுத்தல் 1:6). பாவத்தினிமித்தம் பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை தேவன் இயேசுவின் இரத்தத்தினாலே பாவங்களற கழுவினது மட்டுமல்ல, நம்மை ராஜாக்களாகவும் ஆக்கியிருக்கிறார் என்று இந்த வசனத்திலே பார்க்கிறோம். மனிதன் ராஜாவைப்போல அரசாள வேண்டுமென்பது தேவனுடைய பூர்வகால திட்டம். ஆகவேதான் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினபோது தேவன் இப்படிச் சொன்னார்: "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்" (ஆதியாகமம் 1:26-28). "ஆளக்கடவர்கள்", "ஆண்டுகொள்ளுங்கள்" என்கிற பதங்களை கவனித்தீர்களா? யார் ஆளுகை செய்வார்கள்? அடிமைகளா? இல்லை! ராஜாக்கள் தான் ஆளுகை செய்வார்கள். தேவன் மனுக்குலத்தை அடிமைகளாக அல்ல, ஆளுகை செய்கிற ராஜாக்களாக உண்டாக்கினார். தேவன் ராஜாதி ராஜா. அவர் சர்வத்தையும் ஆளுகிறவர். அவர் மனிதனை அவரைப் போலவே ஆளுகை செய்கிற ஒரு குட்டி ராஜாவாக உண்டாக்கினார். ஆனால், மனிதன் பிசாசின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, பாவம் செய்தபோது ஆளுகையையும், ராஜரீகத்தையும், மகிமையையும் இழந்து ஒரு அடிமையாகி விட்டான் என்று வேதத்திலே பார்க்கிறோம். பிசாசு மனிதனை ஆண்டுகொண்டான். பாவமும், மரணமும், பிசாசின் தீமைகளும் மனிதனை ஆண்டுகொண்டது. பாவத்தையும், வியாதியையும், தரித்திரத்தையும் கீழ்ப்படுத்தி ஒரு ராஜாவைப்போல வாழ வேண்டியவன் அவைகளுக்கு அடிமைப்பட்டுப் போனான் என்பது வருந்தத்தக்க ஒரு உண்மை. கெம்பீரமாய் வாழ வேண்டியவன் பரிதாப நிலமைக்குள் விழுந்து விட்டான். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் மனிதனை விழுந்துபோன நிலமையிலே விட்டு விடவில்லை. அவனை அதிலிருந்து தூக்கியெடுத்து மறுபடியும் அவனை ராஜாவாக்கும்படி அவரே இயேசு என்கிற பெயரிலே வந்து சிலுவையிலே பாடுபட்டார். இயேசுவின் சிலுவைப்பாடுகள் பாவத்திலே விழுந்து கிடக்கிற மனிதனை தூக்கியெடுத்து அவனை ராஜாவாக்குகிறது என்று வேதம் போதிக்கிறது. இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ராஜாக்களாயிருக்கிறார்கள். ஒரு நாட்டுக்கு ஒரு ராஜா அல்லது எங்கோ ஒரு ராஜா என்றல்லாமல் இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாருமே ராஜாக்களாயிருக்கிறோம் என்று வேதம் திட்டவட்டமாய்ப் போதிக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு என்ன சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள். "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேதுரு 2:9). தேவன், நம்மை 'ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்' என்று சொல்லுகிறார். நாம் பிச்சைக்கார கூட்டமல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன் அந்தகார இருளிலே கிடந்தோம். பிசாசின் ராஜ்யத்திலே அவனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால் இப்பொழுதோ, ஒளியின் ராஜ்ஜியத்துக்குள்ளே வந்த நம்மை தேவன் ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று அழைக்கிறார். அநேக தேவனுடைய மக்கள் தங்களை இப்படி எண்ணுகிறதில்லை. நான் குப்பை, தூசி, ஒன்றுக்கும் உதவாத பாவி என்று சொல்லுகிறார்கள். இதைத் தாழ்மை என்று நினைக்கிறார்கள். இது தாழ்மையல்ல, அறிவீனம். நாம் குப்பைகளல்ல, தூசியல்ல, பாவிகளல்ல. நாம் பிசாசின் கரத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களாய், ராஜாக்களாய் இருக்கிறோம். இந்த எண்ணத்தை மனதிலே பதிக்க வேண்டும். இதுதான் உண்மையான தாழ்மை. தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பதுதான் உண்மையான தாழ்மை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் அநேகர் தங்களை தேவனுக்கு முன்பாக பிச்சைக்காரர்களைப் போல உணருகிறார்கள். இதையும் தாழ்மை என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய ஜெபங்களெல்லாம் 'கெஞ்சுகிறேன்', 'மன்றாடுகிறேன்' என்று பிச்சைக் கேட்பது போலவே இருக்கிறது. இவர்கள் கர்த்தரிடத்தில் பெரிய காரியங்களைக் கேட்பதும் இல்லை, பெற்றுக் கொள்வதும் இல்லை. ஐநூறு ரூபாயையோ அல்லது ஆயிரம் ரூபாயையோ கேட்கிற பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஒருபோதும் அவ்வளவு பெரிய தொகையை அவர்கள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுடைய புத்தி பிச்சைக்கார புத்தி. அதேபோலத்தான் தேவனுக்கு முன்பாக பிச்சைக்காரர்களைப் போல உணருகிற தேவனுடைய பிள்ளைகளும் பெரிய காரியங்களைக் கேட்கவும் மாட்டார்கள்; அவைகளைப் பெற்று அனுபவிக்கவும் மாட்டார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயிருக்கிறோம் என்கிற உணர்வுள்ளவர்கள் பெரிய நன்மைகளை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளுகிறவர்களாய் இருப்பார்கள். நம் தேவன் பெரியவர், அவரிடத்தில் நாம் உரிமையோடு வந்து கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் நம்மைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள். "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபேசியர் 2:7). 'உட்கார செய்யப் போகிறார்' என்று சொல்லாமல், 'உட்காரவும் செய்தார்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அநேக தேவனுடைய மக்கள் எதிர்காலத்திலே பரலோகத்துக்குப் போன பிறகு இயேசுவோடுகூட சிங்காசனத்தில் வீற்றிருப்போம் என்று நம்புகிறார்கள். அது வேத வசனம் சொல்லுகிற சத்தியம்தான். ஆனால், இந்த வசனம் அதைப் பற்றியதல்ல. இந்த வசனம், நாம் இரட்சிக்கப்பட்ட அன்றைக்கே இயேசுவோடுகூட ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, அவரோடேகூட உன்னதங்களிலே உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் என்று […]